டேன்டீயை மத்திய அரசிடம் ஒப்படையுங்கள்
தமிழக அரசால் முடியவில்லை என்றால் டேன்டீயை மத்திய அரசிடம் ஒப்படையுங்கள் நாங்கள் நடத்திக் கொள்கிறோம் என கூடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
கூடலூர்,
தமிழக அரசால் முடியவில்லை என்றால் டேன்டீயை மத்திய அரசிடம் ஒப்படையுங்கள் நாங்கள் நடத்திக் கொள்கிறோம் என கூடலூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசினார்.
பா.ஜ.க. ஆர்ப்பாட்டம்
நீலகிரி, வால்பாறை ஆகிய இடங்களில் உள்ள தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டங்களை(டேன்டீ) வனத்துறையிடம் ஒப்படைக்கும் தமிழக அரசின் முடிவை கண்டித்து நீலகிரி மாவட்டம் கூடலூர் ஐந்து முனை சந்திப்பு பகுதியில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்தில் டேன்டீயை வனத்துறையிடம் ஒப்படைப்பதை கண்டித்தும், தாயகம் திரும்பிய தமிழர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை பேசும்போது கூறியதாவது:-
1823-ம் ஆண்டு தமிழகத்தில் உள்ள திருச்சி, புதுக்கோட்டை, பெரம்பலூர், தஞ்சாவூர், ராமநாதபுரம், தூத்துக்குடி உள்பட 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் இருந்து பிரிட்டிஷ் கம்பெனிகள் தலைமன்னார் வழியாக இலங்கைக்கு தமிழர்களை வேலைக்காக அழைத்து சென்றனர். இலங்கை நாட்டுக்கு முதன் முதலாக தமிழர்கள் சென்றனர். அங்கு பல்வேறு சிரமங்களுக்கிடையே பணியாற்றினர். 1948-ம் ஆண்டு இலங்கை சுதந்திரத்துக்கு பிறகு 10 லட்சம் தமிழர்களை அகதிகளாக கருதி குடியுரிமை பறிக்கப்பட்டது.
வனத்துறையிடம் ஒப்படைக்க...
இதைத்தொடர்ந்து 1963-ம் ஆண்டு லால் பகதூர் சாஸ்திரி- சிறிமாவோ பண்டாரநாயகா இடையே ஒப்பந்தம் ஏற்பட்டு 5 லட்சத்து 25 ஆயிரம் தமிழர்கள் இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். தமிழ்நாடு அரசு தேயிலை தோட்ட கழகத்தில் குறைந்த சம்பளத்தில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு தீப்பெட்டி போல் வீடுகள் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிறுவனத்தை மூட 5,315 ஏக்கர் நிலத்தை வனத்துறையிடம் ஒப்படைக்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
தற்போது டேன்டீ குடியிருப்புகளை விட்டு கட்டாயம் வெளியேற்றும் வகையில் தொழிலாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு உள்ளது. இதை பா.ஜ.க. பார்த்துக்கொண்டிருக்காது. இன்றைக்கு கூட தாயகம் திரும்பிய தமிழர் வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்து மேடையில் பேசுகிறேன். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பல அறைகளுடன் கூடிய 60 ஆயிரம் வீடுகளை பிரதமர் நரேந்திர மோடி கட்டிக் கொடுத்துள்ளார்.
மத்திய அரசிடம் ஒப்படையுங்கள்
ஆனால், தமிழகத்தில் தாயகம் திரும்பிய தமிழர்களை இரண்டாம் தர குடிமக்களாக திராவிட மாடல் அரசு நடத்தி வருகிறது. டேன்டீ நிறுவனத்தை தமிழக அரசால் நடத்த முடியவில்லை என்றால் மத்திய அரசிடம் ஒப்படையுங்கள் நாங்கள் நடத்திக் கொள்கிறோம். தமிழக நிதி அமைச்சர் பொறுப்பேற்றதும் டேன்டீ, மின்சார வாரியம் உள்ளிட்ட 60 பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் செயல்படுகிறது என கூறியிருந்தார்.
டேன்டீயில் ரூ.211 கோடி கடன், மின்சார வாரியத்தில் ரூ.1 லட்சம் கோடிக்கு மேல் கடன் உள்ளது என கூறப்பட்டது. இந்நிறுவனங்கள் நஷ்டம் அடைவதற்கு அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் காரணம் இல்லை. தனியார் தோட்டங்கள் லாபகரமாக செயல்பட்டு வருகிறது.
நில பிரச்சினை
கூடலூருக்கு வருகிறேன் என்றதும் 778 பேருக்கு வீடுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்படுகிறது. இன்றைக்கு டேன்டீ நஷ்டம் என கூறி திராவிட மாடல் அரசு தனியார் கம்பெனிக்கு கொடுக்க வாய்ப்புள்ளது. அரசு அலுவலகங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலும் டேன்டீ தூளை விற்பனை செய்தால் ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கும். இதன் மூலம் அனைவருக்கும் வீடுகள் கட்டிக் கொடுக்கலாம்.
கூடலூர் பகுதியில் உள்ள சட்டப்பிரிவு-17 நில பிரச்சினையால் 12 ஆயிரம் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்காமல் உள்ளது. இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண கோரி மக்கள் கூறும் நிலையில், இன்று, நாளை என உறுதி அளிக்கின்றனர். கர்நாடகா, ஒரிசா, மராட்டியம் உள்பட எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் கூடலூர் பகுதியில் மனித-வனவிலங்கு மோதல்கள் நடக்கிறது. இதற்கு தீர்வு காணப்படவில்லை.
மக்களை சந்திப்போம்
பிரதமர் நரேந்திர மோடி மத்திய மந்திரி எல்.முருகனை மாதந்தோறும் 5 நாட்கள் நீலகிரியில் சுற்றுப்பயணம் செய்து மக்கள் பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண வேண்டுமென தெரிவித்துள்ளார். காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியில் மோடி தமிழின் பெருமையை பேசினார். வருகிற ஜனவரி மாதம் நீலகிரியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து மீண்டும் நேரில் வந்து மக்களை சந்திக்க உள்ளோம். நீலகிரியில் மாற்றம் வந்துவிட்டது. 2024-ல் மக்கள் உரிய தீர்ப்பளிப்பார்கள். இவ்வாறு அவர் பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. அ.சவுந்திரபாண்டியன் உள்பட கட்சியினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர். முன்னதாக மைசூரு வழியாக கூடலூர் வந்த பா.ஜ.க. தலைவர் அண்ணாமலைக்கு கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். மேலும் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மோகன் நிவாஸ் மேற்பார்வையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.