நண்பர் வீட்டில் கர்நாடக மாநில மாற்றுத்திறனாளி பெண் தற்கொலை
ஜோலார்பேட்டையில், நண்பர் வீட்டுக்கு வந்த கர்நாடக மாநில மாற்றுத்திறனாளி பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நண்பர் வீட்டுக்கு...
கர்நாடக மாநிலம் திப்பூர் காச்சகவுண்டன அல்லி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவரது மகள் ஹேமலதா (வயது 26). மாற்றுத்திறனாளியான இவருக்கு அசோக் என்பவருடன் திருமணம் நடைபெற்று தற்போது விவா கரத்து ஆகிவிட்டது. இவரது நண்பர்களான டேவிட் நியூட்டன் பால் (68), அவரது மனைவி ஜோதி (57) ஆகிய இருவரும் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சந்தைக்கோடியூர் பகுதியில் உள்ள சமத் பாய் தெருவில் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு ஹேமலதா ரெயில் மூலம் நண்பர் டேவிட் நியூட்டன் பால் வீட்டுக்கு வந்துள்ளார். அவர் டேவிட் நியூட்டன்பால் மற்றும் அவரது மனைவியிடம் நான் வீட்டை விட்டு வெளியே வந்து விட்டேன். இங்கு ஏதாவது வேலை செய்து பிழைத்துக் கொள்கிறேன். எனக்கு இன்று ஒரு நாள் மட்டும் தங்க அனுமதி கொடுங்கள் என கேட்டு நண்பர் வீட்டில் தங்கி உள்ளார்.
தூக்குப்போட்டு தற்கொலை
பின்னர் டேவிட் நியூட்டன் பால், தனது மனைவியுடன் வேலைக்கு சென்று விட்டார். மாலையில் அவர்கள் வேலை முடிந்து நேற்று காலை வீட்டுக்கு வந்த போது வீட்டில் உள்ள அறையில் ஹேமலதா மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக இது குறித்து ஜோலார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் ஜோலார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.