சாலையில் குப்பைகள் கொட்டிய கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையத்துக்கு அபராதம்
சாலையில் குப்பைகள் கொட்டிய கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
ஊட்டி
சாலையில் குப்பைகள் கொட்டிய கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையத்துக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சியில் தினசரி 36 டன் குப்பைகள் சேகரமாகிறது. எனவே தற்போது மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து தர உத்தரவிடப்பட்டு உள்ளது. ஆனாலும் பெரும்பாலானோர் குப்பைகளை முறையாக தரம் பிரித்து வழங்குவதில்லை. மேலும் பொது இடங்களில் வீசி செல்கின்றனர்.
இந்தநிலையில் ஊட்டி - கோத்தகிரி சாலையில் அண்ணா உள் விளையாட்டு அரங்கம் அருகே குப்பைகள் வீசி எறியப்பட்டு உள்ளதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதன்பேரில் நகராட்சி ஆணையாளர் காந்திராஜன் உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் ஸ்ரீதர், சுகாதார ஆய்வாளர் மகாராஜன் உள்ளிட்டோர் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
ரூ.10 ஆயிரம் அபராதம்
அப்போது வீசி எறியப்பட்ட குப்பை பைகளில் ஒரு கடையின் பெயர் இருந்துள்ளது. கோத்தகிரி சாலையில் அமைந்துள்ள அந்த கைவினை பொருட்கள் விற்பனை நிலையத்திற்கு சென்று விசாரித்த போது அங்கிருந்து தான் குப்பைகள் சாலையில் வீசி எறியப்பட்டது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அந்த விற்பனை நிலையத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் குப்பைகளை சாலையில் வீச கூடாது என்று உத்தரவிட்டனர்.