கள்ளக்குறிச்சியில்சாலையில் தவறவிட்ட நகை பெண்ணிடம் ஒப்படைப்பு
கள்ளக்குறிச்சியில் சாலையில் தவறவிட்ட நகை பெண்ணிடம் ஒப்படைப்பு
கள்ளக்குறிச்சி கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 50). இவர் நேற்று முன்தினம், கடைவீதியில் உள்ள கடைக்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக வந்திருந்தார். அப்போது, நான்கு முனை சந்திப்பு பகுதியில் தான் எடுத்து வந்தபணப்பையில் இருந்த பர்சை தவறி கீழே போட்டு சென்றுவிட்டார்.
இந்நிலையில், அந்த வழியாக சென்ற போக்குவரத்து போலீசார், சாலையோரத்தில் கிடந்த அந்த பர்சை, எடுத்தனர். பின்னர் அதை திறந்து பார்த்த போது, அதில் 10 ஆயிரம் ரூபாய், 2 கிராம் தங்க தோடு, ஆதார், குடும்ப அட்டை இருந்தது. ஆதார் அட்டையில் கோட்டைமேடு அமுதா என இருந்தது. இதையடுத்து, அவரது வீட்டுக்கு சென்று விசாரித்தனர். பின்னர் பர்சை தவறவிட்டது குறித்து போலீசாரிடம் தெரிவித்தார். இதன்பின்னர் அவரை நான்குமுனை சந்திப்பில் உள்ள போக்குவரத்து புறக்காவல் நிலையத்திற்கு வரவைத்து, நகை, பணம் மற்றும் ஆவணங்களுடன் பர்சை அமுதாவிடம் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தர்மராஜ் மற்றும் போக்குவரத்து போலீசார் ஒப்படைத்தனர். அந்த பர்சை பெற்றுக் கொண்ட அவர் போலீசாருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார்.