கைம்பெண்கள்-கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி
தூத்துக்குடி மாவட்டத்தில் கைம்பெண்கள்-கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மிகவும் குறைந்த வட்டியில் கடனுதவி வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கடனுதவி
தமிழக முதல்-அமைச்சர் ஏழை, எளிய மக்கள், விவசாயிகள், நலிவுற்ற விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் பல்வேறு தரப்பிலான மக்கள் பயனடையும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் அரசு கூட்டுறவுத்துறை மூலம் தமிழ்நாட்டில் உள்ள கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு மிகவும் குறைந்த வட்டியான 5 சதவீதம் வட்டியில், அவர்களின் பொருளாதார நிலை உயர கடன் வழங்கப்படும் என்று அறிவித்து உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களிலும் கடன் உதவி வழங்கப்பட்டு வருகிறது. ரூ.4 ஆயிரத்துக்கும் குறைவான மாத வருமானம் உள்ள அனைத்து கைம்பெண்கள், ஆதரவற்ற விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட கைம்பெண்கள் ஆகியோர் இந்த கடன் திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவர்கள் ஆவர். இந்த கடன் தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படுகிறது. கடன் தொகையை அதிகபட்சம் 120 நாட்களுக்குள் மாதம் இருமுறை என்ற அடிப்படையில் திருப்பி செலுத்த வேண்டும்.
296 பயனாளிகள்
தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் 26 கிளைகளிலும் இந்த கடன் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதுவரை 296 பயனாளிகளுக்கு ரூ.51 லட்சத்து 78 ஆயிரம் கடன்கள் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் இந்த கடன் திட்டத்தில் பயன் பெற, விதவைச் சான்று, விண்ணப்பதாரர் மற்றும் பிணையதாரரின் ஆதார் கார்டு மற்றும் ஸ்மார்ட் கார்டு நகல், பாஸ்போர்ட் அளவுள்ள 2 புகைப்படம் ஆகிய ஆவணங்களை அருகில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் சமர்ப்பித்து கிளைமேலாளரை அணுகி கடன் பெற்றுக் கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.