தூக்கில் தொங்கிய பெண் சாவு
தூக்கில் தொங்கிய பெண் உயிரிழந்தார்.
சோமரசம்பேட்டை:
திருமணம்
திருச்சி மாவட்டம், சோமரசம்பேட்டையை அடுத்துள்ள தீரன்நகர் விஜயநகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது 65). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கனகவள்ளி(60). இவர்களது மகள் லட்சுமி(27).
கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமியை முசிறியை அடுத்த கரிகாலியை சேர்ந்த துரைமுருகன்(35) என்பவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இவர்களுக்கு 1 வயதில் ஹனிமதி என்ற மகள் இருக்கிறாள். இவர்கள் தீரன்நகரில் ராஜேந்திரன் வீட்டுக்கு அருகில் வாடகை வீட்டில் குடியிருந்து வந்தனர். துரைமுருகன் திருச்சி காஜாபேட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார்.
தூக்கில் தொங்கினார்
இந்நிலையில் துரைமுருகன் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை வாங்கி தராமல், வீண் செலவு செய்து வந்ததாகவும், மேலும் தனது மனைவியை துன்புறுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் லட்சுமி மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.இந்நிலையில் கடந்த மாதம் 30-ந் தேதி வீட்டில் மின்விசிறி கொக்கியில் லட்சுமி தூக்குப்போட்டு கொண்டதாக ராஜேந்திரனுக்கு துரைமுருகன் தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து அங்கு வந்த லட்சுமியின் பெற்றோர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் லட்சுமியை மீட்டு உடனடியாக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
கைது
அங்கு சிகிச்சை பலனின்றி லட்சுமி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கனகவள்ளி கொடுத்த புகாரின்பேரில் சோமரசம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் தூக்கில் தொங்குவதற்கு முன்பாக லட்சுமி, தனது சாவுக்கு கணவர்தான் காரணம் என்று செல்போனில் வீடியோ பதிவு செய்து, அதனை உறவினருக்கு அனுப்பியதாக தெரியவந்தது.
இதையடுத்து தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து துரைமுருகனை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு பாரதிதாசன் விசாரணை நடத்தி வருகிறார். திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஸ்ரீரங்கம் கோட்டாட்சியர் செல்வராஜ் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.