அனுமன் ஜெயந்தி விழா: கோவில்களில் ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை


அனுமன் ஜெயந்தியையொட்டி சேலம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

சேலம்

சிறப்பு பூஜை

ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் வரும் மூலம் நட்சத்திரத்தில் அனுமன் ஜெயந்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, அனுமன் ஜெயந்தியையொட்டி நேற்று சேலம் மாவட்டத்தில் உள்ள பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.

சேலத்தில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோவிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு பால், தயிர், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன்பிறகு 1,008 வடைமாலை சாத்தியும், ராஜஅலங்காரம் செய்தும் சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கோவில்களில்

இதேபோல், சேலம் பட்டைக்கோவில் என்று அழைக்கப்படும் வரதராஜபெருமாள் கோவிலுக்கு எதிரே உள்ள ஆஞ்சநேயர் சன்னதியில் நேற்று சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜை நடந்தது. செவ்வாய்ப்பேட்டை பாண்டுரங்கநாதர். பிரசன்ன வெங்கடாசலபதி, ஆனந்தா இறக்கம் பகுதியில் உள்ள லட்சுமி நாராயண சுவாமி, சிங்கமெத்தை சவுந்திரராஜ பெருமாள் கோவில்,

சின்னதிருப்பதி வரதராஜ பெருமாள் கோவில், நெத்திமேடு கரியபெருமாள் கோவில், நாமமலை வரதராஜ பெருமாள் கோவில் உள்பட சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள், ஆஞ்சநேயர் கோவில்களில் நேற்று அனுமன் ஜெயந்தியையொட்டி சிறப்பு பூஜை நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபட்டனர்.

புத்தூர்

தலைவாசலை அடுத்துள்ள புத்தூர் கிராமத்தில் 8 அடி உயரம் உள்ள ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அனுமன் ஜெயந்தியையொட்டி சாமிக்கு பால், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் வெண்ணெய் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

சுவாமிக்கு வடைமாலை, துளசி மாலை, எலுமிச்சம் பழம் மாலை, வெற்றிலை மாலை மற்றும் பல்வேறு புஷ்பங்களால் மாலைகள் அணிவித்தும் வழிபாடு நடத்தப்பட்டது. சாமிக்கு சிறப்பு யாக பூஜை நடந்தது. இதில் புத்தூர் கிராமத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தலைவாசல்

இதேபோல் தலைவாசல் டோல்கேட் அருகில் தேசிய நெடுஞ்சாலையில் பெரியஏரி பகுதியில் ராம ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை வழிபாடு நடந்தது. இந்த கோவிலில் சாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர், தேன், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. பக்தர்கள் அனுமன் வேடம் அணிந்து கலந்து கொண்டு பக்தர்களுக்கு ஆசி வழங்கினர்.

வீரகனூர் ஏரிக்கரை அருகில் வழித்துணை ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடந்தது. வீரகனூர் பகுதியில் இருந்து பக்தர்கள் திரண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆறகளூர் கரிவரதராஜ பெருமாள் கோவில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜை, வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஆத்தூர்

ஆத்தூர் கடைவீதி அக்ரஹாரம் பகுதியில் வரசித்தி விநாயகர் கோவிலில் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம், புஷ்ப அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. அதிகாலையில் இருந்து ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். ஆத்தூர் கோட்டை பகுதியில் வடபுறம் பார்த்த ஆஞ்சநேயர் சுவாமிக்கு வடை, துளசி அலங்காரம், வெண்ணெய் காப்பு அலங்காரம், நெய் அபிஷேகம், பஞ்சாமிர்த அபிஷேகம் போன்றவை செய்யப்பட்டு பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

ஆத்தூர் கூட்ரோடு ராசிபுரம் பகுதியில் உள்ள ஸ்ரீ அரங்கநாதர் கோவிலில் பஞ்சமுக ஆஞ்சநேயர் சுவாமி எலுமிச்சம் பழம் மாலை, துளசி மாலை, வெண்ணெய் அபிஷேகம், பால் அபிஷேகம், நெய் அபிஷேகம் செய்யப்பட்டு 108 சங்காபிஷேகத்துடன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

மேச்சேரி

மேச்சேரி பொங்கப்பாளியில் வடக்கு முகம் பார்த்த சுயம்பு சக்தி வீரஆஞ்சநேயர் கோவில், மாதநாயக்கன்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவில், அரசமரத்து புதூர் ஜெயவீர ஆஞ்சநேயர் கோவில், தெத்திகிரிப்பட்டி அபய ஆஞ்சநேயர், இரட்டை கிணறு வீர ஆஞ்சநேயர் கோவில், பொட்டனேரி 4 ரோடு ஆஞ்சநேயர் கோவில், மேச்சேரி எறகுண்டப்பட்டி ரங்கநாதர் ஆலயத்தில் எழுந்தருளியுள்ள வடக்கு முகம் பார்த்த யோக ஆஞ்சநேயர், நங்கவள்ளி லட்சுமி நரசிம்ம சாமி கோவிலில் பக்த ஆஞ்சநேயர் கோவில், ஜலகண்டாபுரம் அருகே தோரமங்கலம் சின்னப்பம்பட்டி சாலையில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயர் கோவிலிலும் ஜலகண்டாபுரம் சஞ்சீவிராய பெருமாள் கோவில் ஆகிய கோவில்களில் அனுமன் ஜெயந்தி யொட்டி சிறப்பு அபிஷேகம், ஆராதனை, வடைமாலை, வெற்றிலை மாலை, சந்தன காப்பு அலங்காரம், வெண்ணெய் காப்பு அலங்காரம் ஆகியன நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தீ மிதித்தல், கரகம் எடுத்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தினர்.

எடப்பாடி

எடப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவில், வீரப்பன்பாளையம் அருகே வெள்ளைகரடு திம்மராய பெருமாள் சன்னதி, பழைய எடப்பாடி சென்றாய பெருமாள் கோவில், கூடக்கல் மாட்டுப் பெருமாள் மலைக்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் ஆஞ்சநேய ஜெயந்தி விழா நடந்தது.

இதன் ஒரு பகுதியாக எடப்பாடி மூக்கரை நரசிம்ம பெருமாள் கோவில் வளாகத்தில் பால ஆஞ்சநேயர் சாமிக்கு 108 வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து தங்க கவசத்தில் பக்தர்களுக்கு பாலா ஆஞ்சநேயர் அருள் பாலித்தார். ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

கருப்பூர்

சேலம் கருப்பூரில் ராம பக்த ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று அதிகாலை 4 மணி அளவில் விநாயகர் வழிபாடு, கணபதி ஹோமம், குபேர ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், கலச பூஜை, சங்கு பூஜை நடந்தது. தொடர்ந்து கோவில் தர்மகர்த்தா சுகுமார், தலைமை பூசாரி மாணிக்கம், ஆகியோர் தலைமையில் காலை 6 மணி முதல் 9 மணி வரை கோ பூஜை, விஸ்வரூப தரிசன சிறப்பு பூஜை நடந்தது. ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு 108 வடை மாலை அணிவிக்கப்பட்டு பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர் அனைவருக்கும் அன்னதானமும், பிரசாதமும் வழங்கப்பட்டது. இரவு 7 மணி அளவில் சாமி ஊர்வலம் நடந்தது. இதில் ராமர் பட்டாபிஷேக அலங்காரம் செய்யப்பட்டு கோவில் நிலையத்தில் இருந்து முக்கிய வீதிகளின் வழியாக சென்று பக்தர்களுக்கு அருள் புரிந்தார். தொடர்ந்து சாமி ஊர்வலம் கோவில் சென்றடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story