"உழைச்சதுக்கு நல்ல ரிசல்ட் கிடைச்சிருக்கு"- சென்னை மேயர் பிரியா
மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளது என மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்தில் நிறைவடைது வழக்கம். இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை கடந்த 29-ம் தேதி முதல் தொடங்க உள்ளதாக வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதன்படி வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கியது.
குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது. சென்னையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் சாலைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.
இந்நிலையில், கடந்தாண்டு அதிக பாதிப்புகள் இருந்த நிலையில், 95 சதவீத வடிகால் பணிகள் நிறைவடைந்துள்ளதால், இனி பாதிப்பு இருக்காது என சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
கடந்த ஆண்டு வெள்ளத்தினால் சென்னை அதிக அளவு பாதிக்கப்பட்டிருந்தது. அந்த அளவுக்கு பாதிப்பு இந்த ஆண்டு இருக்க கூடாது என மழைநீர் வடிகால் பணிகள் முக்கியமான பணிகளாக நடைபெற்று முடிந்துள்ளது. முதல்-அமைச்சர் அறிவுறுத்தல் படி மழைநீர் வடிகால் பணிகளை முக்கியமான பணிகளாக மேற்கொண்டோம். மழைநீர் வடிகால் பணிகள் 95 சதவீதம் முடிந்துள்ளது.
அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது. முதல் அமைச்சர் அவர்கள் கடந்த ஆண்டு வெள்ள பாதிப்பின் போது மழைநீரில் இறங்கி ஆய்வு மேற்கொண்டார். இந்த வருடம் அந்த அளவுக்கு பாதிப்புகள் இருக்கக்கூடாது என் எண்ணி மழைநீர் வடிகால் பணிகளை முக்கியமான பணிகளாக மேற்கொண்டு வந்துள்ளார். இதற்கு பின் மழையினால் அதிக அளவு பாதிப்பு இருக்காது என நாங்கள் நம்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.