குழந்தைகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கிணறுகளை மூட வேண்டும்
தேனி மாவட்டத்தில் குழந்தைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ள கிணறுகளை உடனடியாக மூட வேண்டும் என்று கலெக்டர் உத்தரவிட்டார்.
திறந்தவெளி கிணறுகள்
தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கைவிடப்பட்ட குவாரி குழிகள், திறந்தவெளி கிணறுகள் மற்றும் செயலிழந்த ஆழ்துளை கிணறுகளை கண்டறிய விரிவான கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
திறந்தவெளி கிணறுக்கு போதுமான உயரத்தில் உறுதியான சுவர் கட்டப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இதேபோல், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள், குறிப்பாக குழந்தைகளுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய கிணறுகள் உடனடியாக மூடப்பட வேண்டும். கைவிடப்பட்ட குவாரி குழிகளுக்கு சம்பந்தப்பட்ட உரிமையாளா்கள் உடனடியாக வேலி அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். திறந்தவெளி கிணறுகள், கட்டுமான குழிகள், செயலிழந்த ஆழ்துளை கிணறுகள் மற்றும் குவாரி குழிகளுக்கு அருகில் யாரும் செல்ல வேண்டாம், ஆபத்தான பகுதி என்ற எச்சரிக்கை பலகைகளை வைக்க வேண்டும்.
தகவல் கொடுக்கலாம்
மேலும், சாலையோரங்களில் உள்ள கால்வாய்களில், சாலை பயன்பாட்டாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், கட்டுமானப் பணிக்காக தோண்டப்படும் பள்ளங்கள் மற்றும் கால்வாய்களின் இருப்பை அறிவுறுத்தும் பொருட்டு ஓட்டுனர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் எச்சரிக்கை பலகை வைக்கப்பட வேண்டும்.
இந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து பணிகளை விரைந்து செய்ய சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் இதுகுறித்த தகவல்களை அருகில் உள்ள கிராம நிர்வாக அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.