கன்னியாகுமரி மாவட்டத்தில் 1986-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணை முழுமையாக நிறைவேற்றப்பட்டதா?- உள்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


கன்னியாகுமரி மாவட்டத்தில்  1986-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணை முழுமையாக நிறைவேற்றப்பட்டதா?- உள்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

கன்னியாகுமரி மாவட்டத்தில் 1986-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணை முழுமையாக நிறைவேற்றப்பட்டதா? என்று உள்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


நாகர்கோவிலை சேர்ந்த செலஸ்டின், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

கடந்த 1982-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகுதியில் மத கலவரம் ஏற்பட்டது. அப்போதைய மத தலைவர்கள், அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து கட்டுப்படுத்தினர். அந்த சமயத்தில் தமிழக முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர்., இதுகுறித்து விசாரணை நடத்த நீதிபதி வேணுகோபால் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்தார்.

அந்த கமிஷன் விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் தமிழகத்தில் இது போன்ற கலவரங்கள் ஏற்படாத வகையில் பாதுகாக்கும் பொருட்டும், கன்னியாகுமரி மாவட்டம் அமைதி பூங்காவாக திகழவும் உரிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த நிலையில் அந்த அரசாணை விதிமுறைகளை பின்பற்றி சரியாக நிறைவேற்றப்பட்டு உள்ளதா? என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தேன். ஆனால் அதற்கான முறையான எந்த பதிலும் இல்லை. தமிழகத்தில் அமைதியை ஏற்படுத்தும் பொருட்டு 1986-ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை முழுமையாக செயல்படுத்தவும் உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தமிழக உள்துறை செயலாளர், கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்பும்படி உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.


Next Story