ஏழைகளுக்கு அரசு வழங்கிய நிலம் பிளாட்டுகளாக மாற்றப்பட்டதா?- அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


ஏழைகளுக்கு அரசு வழங்கிய நிலம் பிளாட்டுகளாக மாற்றப்பட்டதா?- அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x

ஏழைகளுக்கு அரசு வழங்கிய நிலம் பிளாட்டுகளாக மாற்றப்பட்டதா? என்று அதிகாரிகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது

மதுரை


கன்னியாகுமரி மாவட்டம் அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே லெவிஞ்சிபுரம் கிராமம் அமைந்துள்ளது. அரசாணையின்படி, இந்த கிராமத்தில் நிலமற்ற ஏழைகளுக்கு நிலம் வழங்கும் திட்டத்தின்கீழ் கடந்த 2006-ம் ஆண்டு ஏழைகளுக்கு அரசு நிலங்கள் ஒதுக்கப்பட்டன. விதிமுறைகளின்படி அந்த நிலங்களை 30 ஆண்டுகளுக்கு விற்பனை செய்வது உள்ளிட்ட எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக்கூடாது.

விவசாயத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஆனால் அந்த நிபந்தனைகளை மீறி அரசு வழங்கிய நிலங்கள் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன.

இதுபோன்ற செயலால் எதிர்காலத்தில் மற்ற ஏழைகளுக்கு அரசு நிலங்கள் கிடைக்காமல் போய்விடும். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசு நிலங்களை பிளாட்டுகளாக மாற்றுவதை தடுத்து, அந்த நிலங்களை மீட்டு உரிய நபர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. முடிவில், மனுதாரரின் குற்றச்சாட்டுகள் குறித்து வருவாய்த்துறை நிர்வாக அதிகாரி, நெல்லை மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூன் மாதம் 2-வது வாரத்துக்கு ஒத்தி வைத்தனர்.


Next Story