நீராதாரங்கள் ஆய்வு செய்யப்படுமா?


நீராதாரங்கள் ஆய்வு செய்யப்படுமா?
x

நீராதாரங்கள் ஆய்வு செய்யப்படுமா?

திருப்பூர்

தளி,

தளி பகுதியில் உள்ள நீராதாரங்களை ஆய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

நீராதாரங்கள்

மழைக்காலங்களில் ஏற்படுகின்ற நீர்வரத்தை சேமித்து வைத்து பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டவையே நீராதாரங்கள். குளம் குட்டைகள் உள்ளிட்டவைக்கு நீர் வழித்தடங்கள் மூலமாக மழை பெய்யும் போது நீர்வரத்து ஏற்படுகிறது. இதனால் நிலத்தடி நீர் இருப்பு உயர்வதுடன் கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் நீர்வரத்தை பெற்று வருகின்றன.

அதுமட்டுமின்றி கிராமத்தின் எல்லைப் பகுதியில் தோற்றுவிக்கப்பட்ட குளம் குட்டைகள் பொதுமக்களின் அன்றாட தேவையை பூர்த்தி செய்து வருகின்றன. இந்த சூழலில் நீராதாரங்கள் பராமரிப்பில் அக்கறை காட்டாததால் நீர் வழித்தடங்கள் குளம் குட்டை உள்ளிட்டவை நாளடைவில் ஆக்கிரமிப்புக்கு உள்ளானது. இதனால் அடைமழை பெய்தாலும் அவை நீர்வரத்தை பெற முடியாத சூழல் நிலவுகிறது. அந்த வகையில் தளி பகுதியில் ஒரு சில நீராதாரங்களைத் தவிர மற்றவைகள் நீர் இருப்பை பெற முடியாமல் தவித்து வருகின்றன.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:-

ஆய்வு செய்ய வேண்டும்

நீராதாரங்களை மையமாகக் கொண்டு அனைத்து விதமான உயிரினங்கள் வசித்து வருதுடன் உழவுத் தொழிலும் நடைபெற்று வருகிறது. அவற்றை ஆண்டுதோறும் பராமரிப்பு செய்து நீர்வரத்தை பெறுவதற்கு தயார்படுத்துவதில்லை. இதனால் படிப்படியாக ஆக்கிரமிப்புக்கு உள்ளானதுடன் மண் சூழ்ந்து மேடாகி விட்டது. இதன் காரணமாக முழுமையான நீர் வரத்தை பெற முடியாமலும் அதையும் மீறி வெள்ளப்பெருக்கு நீராதாரத்தை அடைந்தால் வீணாகி வருவதும் தொடர்கதையாக உள்ளது.

நீராதாரங்கள் பராமரிப்பில் முனைப்பு காட்டாததால் கடந்த ஒரு வாரமாக மழை பெய்தும் நீர்வரத்தை பெறாமல் குளம் குட்டைகள் தவித்து வருகிறது. இதனால் கிணறு ஆழ்குழாய் கிணறுகள் விரைவில் வறண்டுவிடுவதுடன் விவசாய தொழிலும் வறட்சியின் பிடியில் சிக்கிக் கொள்ளும் சூழல் நிலவுகிறது. விவசாயத் தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டு உள்ளது.

எனவே அதிகாரிகள் தளிக்கு உட்பட்ட கிராமங்களில் அமைந்துள்ள நீராதாரங்கள் நீர்வழித்தடங்களை ஆய்வு செய்து அவற்றில் ஏற்படுத்தப்பட்ட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு முன்வர வேண்டும். இதனால் மழைநீர் வீணாகாமல் சேமிக்கப்படுவதால் நிலத்தடி நீர் இருப்பு உயர்ந்து வருவதற்கு ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

----


Next Story