வயல்களில் தேங்கி கிடக்கும் வைக்கோல் கட்டுகள்


வயல்களில் தேங்கி கிடக்கும் வைக்கோல் கட்டுகள்
x
தினத்தந்தி 22 Aug 2023 1:36 AM IST (Updated: 22 Aug 2023 1:36 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழையால் வைக்கோல் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் வயல்களில் வைக்கோல் கட்டுகள் தேங்கி கிடக்கின்றன.

தஞ்சாவூர்

கும்பகோணம்:

கும்பகோணம் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழையால் வைக்கோல் பாதிக்கப்பட்டதால் வியாபாரிகள் வாங்க ஆர்வம் காட்டவில்லை. இதனால் வயல்களில் வைக்கோல் கட்டுகள் தேங்கி கிடக்கின்றன.

கால்நடை வளர்ப்பு

கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. இதனை தவிர பெரும்பாலானோர் கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆடு, மாடுகளை வளர்த்து பால் விற்பனை, இறைச்சிக்காக விற்பனை மற்றும் இயற்கை உர உற்பத்தி மூலம் வருவாய் ஈட்டி வருகின்றனர்.

ஆடு, மாடுகளை பொறுத்தவரை தீவனத்துக்கு என்று பெரும்பாலும் செலவுகள் இருக்கும். அவைகளுக்கு பசுந்தீவனம், அடர் தீவனம் மட்டுமல்லாமல் உலர் தீவனமும் கொடுக்க வேண்டி உள்ளது. இதற்காகவே அறுவடை செய்யும் காலத்தில் கிடைக்கும் சோளத்தட்டை, வைக்கோல் போன்றவற்றை வாங்கியும், தங்களின் வயலில் கிடைப்பதை இருப்பு வைத்து தீவனமாக பயன்படுத்துவார்கள். தற்போது உலர் தீவனத்துக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில் பெரும்பாலான கால்நடை வளர்ப்போர் வைக்கோல்களை வெளியில் இருந்து தான் வாங்கி பயன்படுத்துவார்கள்.

மழையால் பாதிப்பு

வழக்கமாக நெல் அறுவடை பணிகள் நடக்கும் போது வைக்கோல் வாங்குவதற்காக வெளியூரில் இருந்து வியாபாரிகள் போட்டி போட்டு கொண்டு வருவார்கள். அவர்கள் வைக்கோல்களை வாங்கி லாரிகளில் வெளியூர்களுக்கு எடுத்து செல்வார்கள். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளாவுக்கும் வைக்கோல் கொண்டு செல்லப்படும். இதனால் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும்.

தற்போது குறுவை அறுவடை பணிகள் முடிந்து வைக்கோல் கட்டுகளை தயார் செய்து விற்பனைக்காக விவசாயிகள் வைத்துள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்ததால் வைக்கோல் கட்டுகள் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளன.

குவிந்து கிடக்கும் வைக்கோல் கட்டுகள்

இதனால் வைக்கோல் கட்டுகளை வாங்க வெளியூர்களில் இருந்து வியாபாரிகள் வரவில்லை. இதன் காரணமாக கும்பகோணம் சுற்றியுள்ள கிராம பகுதிகளில் வயல்வெளிகளில் வைக்கோல் கட்டுகள் ஆங்காங்கே தேங்கியுள்ளன. கும்பகோணத்தை அடுத்துள்ள ஏரகரம் பகுதியில் வைக்கோல்கட்டுகள் தேங்கியுள்ளன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், கடந்த காலங்களில் ஒரு கட்டு வைக்கோல் ரூ.100 வரை விற்பனையாகியுள்ளது. இங்குள்ள வைக்கோல் கட்டுகளை வெளிமாவட்டங்கள், வெளிமாநில வியாபாரிகள் வந்து வாங்கி செல்வார்கள். கடந்த சில நாட்களாக கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்ததால் வைக்கோல் நனைந்து பாதிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் கவலை

மழையால் பெரும்பாலான இடங்களில் புற்கள் வளர்ந்துள்ளன.சிலர் இதற்காக பண்ணை போல் அமைத்து புற்களை வளர்த்து விற்பனை செய்து வருகின்றனர். வைக்கோல் விலையை விட புல் விலை குறைவாக உள்ளதால் வைக்கோலை வாங்கி வைக்க விரும்புவதில்லை.

தற்போது ஒரு வைக்கோல் கட்டு ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்தாலும் வியாபாரிகள் வாங்க முன்வராததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். வீடுகளில் மாடுகள் வளர்ப்பவர்கள் மட்டுமே தேவைக்கு ஏற்றவாறு வாங்கி செல்கின்றனர் என்றனர்.


Next Story