தூத்துக்குடியை சேர்ந்தவரின் வங்கி கணக்கில் இருந்து மோசடியாக எடுக்கப்பட்ட ரூ.2 லட்சம் மீட்பு


தினத்தந்தி 17 Oct 2022 12:15 AM IST (Updated: 17 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியை சேர்ந்தவரின் வங்கி கணக்கில் இருந்து மோசடியாக எடுக்கப்பட்ட ரூ.2 லட்சத்தை சைபர் குற்றப்பிரிவு போலீசார் மீட்டனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியை சேர்ந்தவரின் வங்கி கணக்கில் இருந்து மோசடி செய்த பணத்தை சைபர் குற்றப்பிரிவு போலீசார் மீட்டனர்.

பணம் மோசடி

தூத்துக்குடி மில்லர்புரத்தை சேர்ந்தவர் ராமசாமி வெங்கட சுப்பிரமணியன். இவர் துபாய் செல்வதற்காக அவருடைய கிரெடிட் கார்டில் சர்வதேச பண பரிவர்த்தனையை ஆக்டிவ் செய்து வைத்துள்ளார். அதன் பின்பு கடந்த 24.6.2022 அன்று அவரது செல்போன் எண்ணுக்கு 2 ஆயிரத்து 572 அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.2 லட்சத்து 9 ஆயிரத்து 972) பணம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு குறுஞ்செய்தி வந்துள்ளது. இதனை தொடர்ந்து ராமசாமி வெங்கட சுப்பிரமணியன் வங்கி கணக்கில் இருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டு இருப்பதை அறிந்தார்.

உடனடியாக அவரது கிரெடிட் கார்டை பிளாக் செய்து உள்ளார். தொடர்ந்து சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிவசங்கரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மீட்பு

தொடர்ந்து போலீசார் சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு இழந்த பணத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது ராமசாமி வெங்கடசுப்பிரமணியன் ஓ.டி.பி. எதுவும் கொடுக்கவில்லை என்பது தெரியவந்தது. இதனால் சம்பந்தப்பட்ட வங்கி பண பரிவர்த்தனையை ரத்து செய்து, இழந்த பணத்தை மீண்டும் அவருடைய கிரெடிட் கார்டில் வரவு வைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், ராமசாமி வெங்கடசுப்பிரமணியனிடம் பணம் வரவு வைக்கப்பட்டதற்கான ஆவணங்களை வழங்கினார். மேலும் பொதுமக்கள் சர்வதேச பண பரிவர்த்தனையை தேவையில்லாமல் ஆக்டிவ் செய்து வைத்திருக்க கூடாது. ஏ.டி.எம். கார்டு, கிரெடிட் கார்டு போன்ற சேவைகளை அதன் பண பரிவர்த்தனைகளின் உச்சவரம்பை தங்களுக்கு தேவையான தொகையை சம்பந்தப்பட்ட வங்கி மூலமாக நிர்ணயித்து பாதுகாப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று கூறினார்.


Next Story