பஞ்சராகி நின்ற லாரி மீது மோதியதில்மோட்டார் சைக்கிளில் வந்த2 வாலிபர்கள் பலி


தினத்தந்தி 24 May 2023 12:15 AM IST (Updated: 24 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி அருகே பஞ்சராகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே பஞ்சராகி நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பரிதாபமாக இறந்தனர்.

ஏ.சி. மெக்கானிக்

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கூசாலிபட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வம் மகன் அன்பரசன் (வயது 27). ஏசி மெக்கானிக். இவர் நேற்று காலையில் புளியங்குளத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் மகன் கேசவன் (26) என்பவருடன் வேலை நிமித்தமாக மோட்டார் சைக்கிளில் நெல்லைக்கு சென்றார்.

அங்கு பணியை முடித்து விட்டு, இருவரும் அதே மோட்டார் சைக்கிளில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர்.

2 பேர் பலி

கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சியை அடுத்த சாலைப்புதூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையில் அவர்கள் நேற்று மாலை வந்தனர். அப்போது, நெல்லையில் இருந்து சாத்தூருக்கு அட்டைக்கழிவுகளை ஏற்றி சென்ற லாரி ஒன்று டயர் பஞ்சர் ஆனதால் சாலையில் நின்றது.

அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் பின்பகுதியில் மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் அன்பரசன், கேசவன் இருவரும் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

லாரி டிரைவரிடம் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு வெங்கடேஷ், மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகண்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். இறந்த 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த விபத்து தொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் நெல்லை மாவட்டம் கல்லிடைக்குறிச்சியை சேர்ந்த மதிவாணன் மகன் ராஜா (32) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். நின்ற லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Next Story