மின் இணைப்பை துண்டிக்க வந்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்


மின் இணைப்பை துண்டிக்க வந்த அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
x
தினத்தந்தி 31 May 2023 12:15 AM IST (Updated: 31 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பழனியில் மார்க்கெட் கடைகளில் மின் இணைப்பை துண்டிக்க வந்த அதிகாரிகளை முற்றுகையிட்டு வியாபாரிகள் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்

தற்காலிக கடைகள்

பழனி காந்தி மார்க்கெட்டில் நகராட்சிக்கு சொந்தமான கட்டிடத்தில் 200-க்கும் மேற்பட்ட காய்கறி, மளிகை கடைகள் செயல்பட்டு வந்தன. இந்த மார்க்கெட்டின் கட்டிடங்கள் பழுதடைந்ததால், பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்ட நகராட்சி சார்பில் முடிவு செய்யப்பட்டது. தற்போது அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அப்போது வியாபாரிகள் தங்களுக்கு தற்காலிக கடைகள் அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதன்படி, பழனி உழவர் சந்தை அருகே மாற்று இடம் கொடுக்கப்பட்டு, அங்கு தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டது. இதையடுத்து பெரும்பாலான வியாபாரிகள் தங்களது கடைகளை காலி செய்துவிட்டு, உழவர் சந்தை பகுதியில் உள்ள தற்காலிக கடைகளுக்கு சென்றுவிட்டனர்.

இதற்கிடையே சில வியாபாரிகளுக்கு மட்டும் தற்காலிக கடைகள் ஒதுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் காந்தி மார்க்கெட்டில், பழைய கட்டிடத்தில் கடைகளை நடத்தி வந்தனர். ஆனால் நகராட்சி சார்பில் கடைகளை காலி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் மாற்று இடம் மற்றும் தற்காலிக கடைகள் அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தனர்.

வியாபாரிகள் வாக்குவாதம்

இந்தநிலையில் நேற்று காந்தி மார்க்கெட்டில் நகராட்சி கட்டிடத்தில் உள்ள கடைகளுக்கு கொடுக்கப்பட்ட மின் இணைப்பை துண்டிப்பதற்காக மின்வாரிய அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகளுடன் சேர்ந்து வந்தனர். அப்போது கடைகளை காலி செய்யாமல் இருந்த சில வியாபாரிகள், அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பேசிய அதிகாரிகள், நகராட்சி சார்பில் தேவையான கால அவகாசம் கொடுத்தும், கடைகளை காலி செய்ய மறுப்பதை ஏற்க முடியாது என்றும், கடைகளை காலி செய்ய வேண்டும் என்றும் கூறினர். ஆனால் அதனை ஏற்காத வியாபாரிகள், தங்களுக்கும் தற்காலிக கடைகள் அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பின்னர் இதுதொடர்பாக மனு கொடுத்தால் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து வியாபாரிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் பழனியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story