விராலிமலை முருகன் கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
விராலிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 30-ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
முருகன் கோவில்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள முருகன் கோவிலில் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குவது விராலிமலை முருகன் கோவிலாகும். இங்கு மலை மேல் முருகன், வள்ளி-தெய்வானையுடன் மயில் மீது அமர்ந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். இந்த கோவிலில் முருகன் அருணகிரிநாதருக்கு காட்சி தந்து அஷ்டமா சித்திகளை வழங்கி திருப்புகழ் பாடசொல்லிய தலமாகவும், நாரதருக்கு பாவ விமோசனம் தந்த தலமாகவும் விளங்குவதாக கூறப்படுகிறது. இத்தனை சிறப்பு பெற்ற விராலிமலை முருகன் கோவிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழாவானது 6 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும்.
சிறப்பு அபிஷேகம்
இந்நிலையில், இன்று சூரியகிரகணத்தையொட்டி கோவில் நடையானது காலை பக்தர்கள் வழிபாட்டிற்கு வழக்கம் போல் திறக்கப்பட்டு பின்னர் மதியம் 12.30 மணி முதல் மாலை 6.30 மணி வரை கோவில் நடை சாத்தப்பட்டது. அதன் பின்னர் கந்த சஷ்டி விழாவையொட்டி இன்று மாலை கணபதி ஹோமம் மற்றும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. பின்னர் காப்பு கட்டுதல் மற்றும் கொடிேயற்றத்துடன் கந்தசஷ்டி விழா தொடங்கியது. விழாவானது வருகிற 30-ந் தேதி வரை 6 நாட்கள் நடைபெறுகிறது.
வருகிற 30-ந்தேதி சூரசம்ஹாரம்
இதனையடுத்து ஒவ்வொரு நாளும் காலை, மாலை இரு வேளைகளிலும் நாகம், சிம்மம், பூதம், கேடயம் உள்ளிட்ட வாகனங்களில் முருகன் வள்ளி, தெய்வானையுடன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான வருகிற 30-ந்தேதி மலை மேல் உள்ள முருகனுக்கு தங்க கேடயம் சாற்றி சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் நடைபெறும். அதனை தொடர்ந்து அம்மனிடம் முருகன் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சியும், பின்னர் மாலை 6 மணியளவில் சூரபத்மனுக்கு பெருவாழ்வு அளித்தல் (சூரசம்ஹாரம்) நிகழ்ச்சி, 31-ந் தேதி திருக்கல்யாணம், 1-ந் தேதி திருக்கல்யாண ஊர்வலம், 2-ம் தேதி பள்ளியரை ஏகாந்த சேவை நிகழ்ச்சியும் நடைபெறும். விழா நாட்களில் கந்தசஷ்டி அரங்கில் தினமும் ஆன்மிக சொற்பொழிவுகள், இன்னிசை நிகழ்ச்சிகள் மற்றும் சிறப்பு பட்டிமன்றம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை செயல் அலுவலர் சந்திரசேகர் தலைமையில் கோவில் மேற்பார்வையாளர் மாரிமுத்து மற்றும் மண்டகப்படிதாரர்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.