வாகன சோதனையில் சிக்கிய ரூ.1½ கோடி கள்ளநோட்டுகளை பதுக்கிய சப்-இன்ஸ்பெக்டரின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி - மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
வாகன சோதனையில் பறிமுதல் செய்த ரூ.1½ கோடி கள்ள நோட்டுகளை கோர்ட்டில் ஒப்படைக்காமல் வீட்டில் பதுக்கிய வழக்கில் சப்-இன்ஸ்பெக்டரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
வாகன சோதனையில் பறிமுதல் செய்த ரூ.1½ கோடி கள்ள நோட்டுகளை கோர்ட்டில் ஒப்படைக்காமல் வீட்டில் பதுக்கிய வழக்கில் சப்-இன்ஸ்பெக்டரின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
கள்ள நோட்டுகள் பறிமுதல்
மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவின் கீழ் செயல்படும், தீவிர குற்றத்தடுப்பு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் ஆனந்த். சமீபத்தில் இவர் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 கார்களில் 3 சாக்கு மூடைகளில் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தார்.
இந்த கள்ளநோட்டுகளை அவர் முழுமையாக கோர்ட்டில் ஒப்படைக்காமல், மதுரை திருமங்கலத்தில் உள்ள போலீஸ் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டில் பதுக்கி வைத்ததாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அங்கு போலீசார் சோதனை செய்தனர். அப்போது ஒன்றரை கோடி ரூபாய்க்கான கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பணியிடை நீக்கம்
இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து அவரை பணியிடை நீக்கம் செய்து மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை மதுரை மாவட்ட கோர்ட்டு தள்ளுபடி செய்தது. பின்னர் அவர் மதுரை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தார்.
பல்வேறு குற்றச்சாட்டுகள்
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு கூடுதல் குற்றவியல் வக்கீல் அன்புநிதி ஆஜராகி, மனுதாரர் மீது இந்த குற்றச்சாட்டு மட்டுமின்றி பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. மேலும் கடன் வாங்கி தருவதாக ஏமாற்றும் கும்பலிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.25 லட்சத்தில் ரூ.16 லட்சத்தை மட்டும் போலீஸ் நிலையத்தில் கணக்கு காட்டியுள்ளார். மீதமுள்ள ரூ.9 லட்சம் பணத்தை அவரே வைத்துக் கொண்டார். இதில் இருந்து ரூ.8 லட்சத்தை தனது வங்கி கணக்கில் டெபாசிட் செய்து உள்ளார்.
இதேபோல திருட்டு நகைகள் பறிமுதல் வழக்கில் நகைகளை முழுமையாக திருப்பி கொடுக்காததும், திருட்டு நகைகளை வாங்கியவர்களை மிரட்டி ரூ.15 லட்சம் பெற்றது உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் உள்ளன. இவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் உள்ளது.. அவருக்கு முன்ஜாமீன் அளித்தால் வழக்கு விசாரணை பாதிக்கும் என்று ஆட்சேபம் தெரிவித்தார்.
மனு தள்ளுபடி
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.