வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து முதலீடுகளை ஈட்டி வருகிறார்


வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து முதலீடுகளை ஈட்டி வருகிறார்
x

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து முதலீடுகளை ஈட்டி வருகிறார் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

திருவண்ணாமலை

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் வெளிநாட்டில் இருந்து முதலீடுகளை ஈட்டி வருகிறார் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

வேலைவாய்ப்பு முகாம்

திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மகளிர் திட்டம் சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் அருணை பொறியியல் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

இதில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்தனர்.

இந்த முகாம் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான வேலைநாடுனர்கள் பங்கேற்றனர்.

முகாமிற்கு கலெக்டர் முருகேஷ் தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் முன்னிலை வகித்தார். வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குனர் ஆ.ஜோதிமணி வரவேற்றார்.

முகாமை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை, மகளிர் திட்டம் மூலம் 147 சுய உதவி குழுக்களுக்கு ரூ.12.98 கோடிக்கான கடனுதவி, 51 தொழில் முனைவோருக்கு ரூ.14.02 கோடி கடனுதவி போன்றவற்றை வழங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

வெளிநாட்டில் இருந்து முதலீடுகள்

படித்து முடித்தவர்கள் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்தால் மட்டும் போதாது. அவர்களுக்கு பணிகள் குறித்து வழிகாட்ட வேண்டும் என்பதற்காக வேலைவாய்ப்பு அலுவலகத்துடன் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை உருவாக்கி தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வருகிறார்.

முதலீடுகளை வெளியில் இருந்து கொண்டு வருவதன் மூலமாக தான் வேலைவாய்ப்பை உருவாக்க முடியும்.

அந்த வகையில் முதல்-அமைச்சர் தேர்தல் வாக்குறுதிகளை படிபடியாக நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் வேலைவாய்ப்பினை உருவாக்கும் வகையில் வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்தில் முதலீட்டாளர்கள் முகவரி என்ற நிகழ்ச்சியை நடத்தி பல ஆயிரம் கோடி ரூபாயை முதலீடுகளாக ஈட்டி அதன்மூலமாக வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை போடப்பட்டு உள்ளது.

மேலும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் வகையில் கல்லூரியில் பாட திட்டங்களை அரசாங்கம் மாற்றி வருகிறது.

தமிழகத்தில் போதுமான பொருளாதாரம் இல்லாததால் வெளிநாட்டிலிருந்து முதலீடுகள் ஈட்டுவதன் மூலம் தொழிற்சாலைகளை உருவாக்கி அனைவருக்கு வேலைவாய்ப்பு உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் தான் முதல்-அமைச்சர் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றார்.

இந்த முகாமில் பங்கேற்று உள்ள நிறுவனங்களில் மனித ஆற்றலை அதிகளவில் பயன்படுத்தும் நிறுவனங்கள் அவர்களுக்கு தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்க வேண்டும்.

போக்குவரத்து வசதிகள்

இந்த முகாமில் தேர்வு செய்யப்படுபவர்கள் உங்களின் குடும்ப பொருளாதாரம் வளர்ச்சி அடையும் வகையில் பணியாற்ற வேண்டும். மேலும் தொழிற்சாலைகளுக்கு தொழிலாளர்கள் செல்லும் பகுதிகளுக்கு தேவையான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, மாநில தடகள சங்க துணைத்தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினர் ஸ்ரீதரன், எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன், அம்பேத்குமார், மகளிர் திட்ட இயக்குனர் சையத்சுலைமான், ஒன்றியக்குழு தலைவர் கலைவாணி கலைமணி, தி.மு.க. நிர்வாகிகள் பன்னீர்செல்வம், பிரியாவிஜயரங்கன், கார்த்திவேல்மாறன், ரமணன், மெய்யூர் சந்திரன், ரமணன், ஏ.ஏ.ஆறுமுகம் மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் யோகலட்சுமி நன்றி கூறினார்.


Next Story