அரசு பாதுகாப்பு இல்லத்தில் சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிய 7 சிறுவர்கள் மீது வழக்குப்பதிவு
வேலூரில் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிய சிறுவர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இல்ல பாதுகாவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
வேலூரில் அரசு பாதுகாப்பு இல்லத்தில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிய சிறுவர்கள் 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் இல்ல பாதுகாவலர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீசு அனுப்பப்பட்டுள்ளது.
சிறுவர்கள் தப்பியோட்டம்
வேலூர் காகிதப்பட்டறையில் அரசு பாதுகாப்பு இல்லம் உள்ளது. இங்கு குற்றச்செயல்களில் ஈடுபட்ட சிறுவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதமும் மற்றும் சில நாட்களுக்கு முன்பும் இங்கிருந்து சிறுவர்கள் தப்பிச் சென்றனர். இந்தசம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் 3-வது முறையாக 7 சிறுவர்கள் கழிவறை ஜன்னலை உடைத்து, போர்வையை கயிறு போன்று பயன்படுத்தி சுவர் ஏறிக் குதித்து தப்பிச் சென்றனர்.
இது குறித்த புகாரின்பேரில் போலீசார் நடத்திய தேடுதல் வேட்டையில் 2 பேரை சில மணி நேரங்களில் பிடித்தனர். மற்றவர்கள் எங்கு சென்றனர் என்பது தெரியவில்லை. அவர்கள் சொந்த ஊருக்கு சென்றிருக்க வாய்ப்பு உள்ளதால் அவர்களை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை, திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளுக்கு தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
7 பேர் மீது வழக்குப்பதிவு
இந்த சம்பவம் குறித்து பாதுகாப்பு இல்ல உதவி கண்காணிப்பாளர் செல்வம் வேலூர் வடக்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தப்பிச் சென்ற 7 சிறுவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பாதுகாப்பு இல்ல கண்காணிப்பாளராக செயல்பட்டு வந்த விஜயகுமார் கடலூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். கடலூரில் பணியாற்றி வந்த கணபதி வேலூருக்கு மாற்றம் செய்யப்பட்டு பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதனிடைேய சிறுவர்கள் தப்பிச் சென்றபோது பாதுகாப்பு பணியில் இருந்த துரை என்ற பாதுகாவலர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பாதுகாப்பு இல்லத்தில் பணியாற்றும் மற்ற பாதுகாவலர்களுக்கும் இந்த சம்பவம் தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.