சட்டை பையில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறி காப்பீடு திட்ட அலுவலர் படுகாயம்
ஆறுமுகநேரியில் சட்டை பையில் வைத்திருந்த செல்போன் வெடித்து சிதறி காப்பீடு திட்ட அலுவலர் படுகாயம் அடைந்தார்.
ஆறுமுகநேரி:
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள தலைவன்வடலி சேது ராஜா தெருவை சேர்ந்தவர் சிவமுருகசுந்தரம் மகன் இசக்கியப்பன் (வயது 40). இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 3 மகள்களும் உள்ளனர். இவர் நெல்லையில் முதல்-அமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.
நேற்று முன்தினம் இசக்கியப்பன் ஆறுமுகநேரி கணேசபுரத்தில் உடல்நிலை பாதிக்கப்பட்ட அவரது சித்தியை பார்க்க சென்றார். அங்கு அவர் மாலையில் உணவு சாப்பிட்டு கொண்டிருந்தபோது, அவரது சட்டைப்பையில் வைத்திருந்த ஸ்மார்ட் போன் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் அவருக்கு மார்பு, முகம் மற்றும் தாடை பகுதியில் பலத்த தீக்காயம் ஏற்பட்டது. இதனால் அவர் வலியால் அலறி துடித்தார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் அவரை உடனடியாக காயல்பட்டினம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ஆறுமுகநேரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் வெடித்து சிதறியதில் காப்பீடு திட்ட அலுவலர் படுகாயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.