ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த"அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்": கடம்பூர் ராஜூ


ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்து தெரிவித்தஅமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்: கடம்பூர் ராஜூ
x
தினத்தந்தி 7 Jan 2023 12:15 AM IST (Updated: 7 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதா குறித்து அவதூறு கருத்து தெரிவித்த “அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு கருப்புக்கொடி காட்டுவோம்” என்று முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

கோவில்பட்டி: கோவில்பட்டியில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டத்தில் பருவமழை பொய்த்ததாலும், சூறைக்காற்றாலும் சேதமடைந்த பயிர்களை கணக்கிட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இதேபோன்று காட்டுப்பன்றிகளால் சேதப்படுத்தப்பட்ட பயிர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இதுதொடர்பாக வருகிற சட்டமன்ற கூட்டத்தொடரிலும் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து வலியுறுத்துவோம்.

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது 8 வழிச்சாலைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல், தற்போது அவர்கள் ஆளுங்கட்சியானதும் 8 வழிச்சாலையை நிறைவேற்ற மத்திய மந்திரியிடம் மனு வழங்குகின்றனர். அ.தி.மு.க.வை பிளவுபடுத்த சில தீய சக்திகள் முயற்சிக்கின்றன. கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் 98 சதவீதம் பேர் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் உள்ளனர். தமிழகத்தில் எப்போது தேர்தல் நடந்தாலும் அ.தி.மு.க. அமோக வெற்றி பெறும்.

அ.தி.மு.க. உள்கட்சி பிரச்சினை தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு அல்லது தேர்தல் ஆணையத்தில் தீர்ப்பு வந்தாலும், கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் தீர்ப்பு எப்போதும் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாகத்தான் இருக்கும். இடைக்கால பொதுச்செயலாளரான அவர் நிரந்தர பொதுச்செயலாளராக பதவி ஏற்பார். தீர்ப்பு நியாயத்தின் பக்கம்தான் கிடைக்கும். மெஜாராட்டி யார் பக்கம் இருக்கிறது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். அதையெல்லாம் மனதில் வைத்துதான் நம்பிக்கையோடு இருக்கிறோம்.

பா.ம.க., ம.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கு தேர்தல் அங்கீகாரம் பெற்று தந்தது அ.தி.மு.க.தான். ஜெயலலிதா பற்றி அவதூறாக பேசிய அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரனுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், அவர் தூத்துக்குடி மாவட்டத்துக்கு வரும்போது கருப்புக்கொடி காட்டுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story