வாலிபரை அரிவாளால் வெட்டிக்கொல்ல முயன்ற டிரைவருக்கு 4½ ஆண்டுகள் சிறை தண்டனை
கும்பகோணம் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிக்கொல்ல முயன்ற டிரைவருக்கு 4½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
கும்பகோணம் அருகே வாலிபரை அரிவாளால் வெட்டிக்கொல்ல முயன்ற டிரைவருக்கு 4½ ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கும்பகோணம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
அரிவாள் வெட்டு
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கோவனூர் சன்னதி தெரு பகுதியை சேர்ந்தவர் குழந்தைராஜ் (வயது65). இவருடைய மகன் சார்லஸ். இவர் அதே பகுதியில் உள்ள பொதுக்குளத்தை மீன் வளர்ப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஏலம் எடுத்திருந்தார். அந்த குளத்தில் சம்பவத்தன்று கோவனூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த டிரைவர் சகாயராஜ் (60) என்பவர் மணல் அள்ளினார்.
அப்போது அங்கு சென்ற சார்லஸ் தான் ஏலம் எடுத்துள்ள குளத்தில் தன்னை கேட்காமல் எப்படி மண் அள்ளலாம் என சகாயராஜிடம் தட்டிக்கேட்டுள்ளார். இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த சகாயராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சார்லசை சரமாரியாக வெட்டினார். இதில் சார்லசின் தோள்பட்டை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. இதை தடுக்க வந்த குழந்தைராஜையும், சகாயராஜ் கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.
சிறை தண்டனை
பின்னர் பலத்த வெட்டுக்காயம் அடைந்து மயங்கி கிடந்த சார்லசை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து குழந்தைராஜ் நாச்சியார் கோவில் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாயராஜை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் முதன்மை சார்பு கோர்ட்டில் நடந்து வந்தது. இதில் நீதிபதி சண்முகப்பிரியா சகாயராஜுக்கு 4½ ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.