தாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் பாம்பு கடித்து சாவு


கடம்பூர் அருகே தாயை காப்பாற்ற முயன்ற சிறுவன் பாம்பு கடித்து பரிதாபமாக இறந்து போனார்.

தூத்துக்குடி

கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் அருகே தெற்கு குப்பனாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். இவருடைய மனைவி அர்ச்சனா. வாய் பேச முடியாதவர். இந்த தம்பதிக்கு கார்த்திக் ராஜா (வயது 5), சுபாஷ் (3) என்ற 2 மகன்கள் இருந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அர்ச்சனா வீட்டில் சமையல் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டு சுவரின் அருகில் இருந்த சிறிய ஓட்டையில் நல்ல பாம்பு ஒன்று இருந்துள்ளது. இதனை பார்த்த சிறுவன் கார்த்திக்ராஜா, பாம்பு தனது தாயை கடித்து விடக்கூடாது என்பதற்காக அதனை விரட்ட முயற்சி செய்து உள்ளான். ஆனால் பாம்பு கார்த்திக் ராஜாவை கடித்து விட்டது. இதில் சிறுவன் கார்த்திக் ராஜா மயக்கமடைந்தான்.

அருகில் இருந்தவர்கள் சிறுவனை மீட்டு கடம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே சிறுவன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து கடம்பூர் போலீசார், சிறுவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தாயை காப்பாற்ற முயற்சி செய்த சிறுவன் பாம்பு கடித்து உயிர் இழந்த சம்பவம் கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story