விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஈரோடு வாலிபர் உடல் உறுப்பு தானம்
விபத்தில் மூளைச்சாவு அடைந்த ஈரோடு வாலிபர் உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டது
ஈரோடு அருகே உள்ள முத்தம்பாளையத்தை சேர்ந்த 34 வயது வாலிபர் ஒருவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடந்த விபத்தில் காயம் அடைந்து சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் அவர் நேற்று மூளைச்சாவு அடைந்தார். இதனால் அவருடைய உடல் உறுப்புகளை தானம் அளிக்க குடும்பத்தினர் முன் வந்தனர்.
இதைத்தொடர்ந்து பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரி உயர் மருத்துவ குழுவினர், மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடலில் இருந்து இதயம், 2 சிறுநீரகங்கள், 2 கண்கள் ஆகியவற்றை பாதுகாப்பாக எடுத்து சென்னை, கோவை, சேலம், ஈரோட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.
மூளைச்சாவு அடைந்தவரின் உடலுக்கு பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் வள்ளி சத்தியமூர்த்தி மற்றும் ஆஸ்பத்திரி டாக்டர்கள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். மூளைச்சாவு அடைந்தவரின் உடலில் இருந்து உறுப்புகளை பாதுகாப்புடன், பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரியில் எடுக்கப்படுவது 2-வது முறை என்பது குறிப்பிடத்தக்கது.