வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு
ஆண்டிப்பட்டி அருகே வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள சக்கம்பட்டி கிழக்குத் தெருவை சேர்ந்தவர் சந்திரபோஸ். ராணுவ வீரர். இவரது மனைவி கவிதா (வயது 36). சந்திரபோஸ் தற்போது விடுமுறையில் ஊருக்கு வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு வீட்டின் கதவை திறந்து வைத்து சந்திரபோஸ், தனது மனைவி, குழந்தைகளுடன் வரவேற்பு அறையில் தூங்கி கொண்டிருந்தார். அப்போது வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த கவிதா கழுத்தில் அணிந்திருந்த 4 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு ஓடினார். இதற்கிடையே திடுக்கிட்டு எழுந்த அவர் தப்பி ஓடிய மர்ம நபரை விரட்டினார். அதற்குள் அவர் மின்னல் வேகத்தில் சென்று விட்டார்.
இதேபோல், ஆண்டிப்பட்டி அருகே உள்ள நடுக்கோட்டை கிராமத்தை சேர்ந்த அழகர்சாமி மனைவி காமாட்சி (62). இவர், சக்கம்பட்டியில் உள்ள தனது மகள் வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு இவர், தான் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை வீட்டில் இருந்த டி.வி. முன்பு கழற்றி வைத்துவிட்டு தூங்கினார். காலையில் எழுந்து பார்த்தபோது தங்க சங்கிலி திருடுபோய் இருந்தது. இந்த சம்பவங்கள் குறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.