வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை விற்ற போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம்
கம்பம் அருகே வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை வியாபாரிகள் மூலம் விற்பனை செய்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
கம்பம் அருகே வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை வியாபாரிகள் மூலம் விற்பனை செய்த போலீஸ் ஏட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
போலீஸ் ஏட்டு
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டியை சேர்ந்தவர் நல்லதம்பி. இவர் கூடலூரை அடுத்த லோயர்கேம்ப் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். நல்லதம்பி, குமுளி, கூடலூர் வடக்கு, தெற்கு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்படும் கஞ்சா வழக்குகள் தொடர்பான கோர்ட்டு அலுவலக பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் நல்லதம்பி கோர்ட்டுக்கு எடுத்துச்சென்ற கஞ்சாவை மறைமுகமாக எடுத்து கஞ்சா வியாபாரிகளுக்கு விற்பனை செய்ததாக கூடலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையாண்டிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதுகுறித்து உத்தமபாளையம் போலீஸ் உதவி சூப்பிரண்டு மதுகுமாரிடம், பிச்சையாண்டி புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடத்துமாறு கம்பம் வடக்கு போலீசாருக்கு, துணை சூப்பிரண்டு உத்தரவிட்டார்.
கஞ்சா விற்பனை
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கடந்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி போலீசார் பறிமுதல் செய்த கஞ்சாவை நல்லதம்பி மதுரை கோர்ட்டில் ஒப்படைப்பதற்காக எடுத்துச்சென்றார். அப்போது அந்த கஞ்சாவில் 250 கிராம் அளவு எடுத்து சின்னமனூரை சேர்ந்த தோட்ட தொழிலாளியான கணேசன் என்பவரிடம் கொடுத்துள்ளார். அவர், சின்னஓவுலாபுரம் இந்திராகாலனியை சேர்ந்த கூலித்தொழிலாளியான மற்றொரு நல்லதம்பியிடம் கஞ்சாவை கொடுத்தார். மற்றொரு நல்லதம்பி, அந்த கஞ்சாவை விற்பனை செய்வதற்காக எரசக்கநாயக்கனூர் பசும்பொன் தேவர் நகரை சேர்ந்த மணிகண்டனை அணுகியுள்ளார். மணிகண்டன், அதே ஊரை சேர்ந்த சரவணகுமாரிடம் கஞ்சாவை விற்றுள்ளார். இவ்வாறு சங்கிலித்தொடர் போன்று கஞ்சா பொட்டலங்கள் கைமாறி விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சா விற்றதாக போலீஸ் ஏட்டு நல்லதம்பி, கணேசன், மற்றொரு நல்லதம்பி, மணிகண்டன், சரவணக்குமார் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பணியிடை நீக்கம்
இதற்கிடையே போலீஸ் ஏட்டு நல்லதம்பி கஞ்சா வியாபாரிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தது தொடர்பான தகவல் போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீஸ் துறைக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் கஞ்சா விற்பனைக்கு துணை போனதாக நல்லதம்பியை பணியிடை நீக்கம் செய்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஏட்டு நல்லதம்பி, சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் வெற்றிபெற்று பரிசு வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.