சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார கேடு
கந்தர்வகோட்டையில் சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இறைச்சி கழிவுகள்
கந்தர்வகோட்டையில் தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையோரம் குப்பைகள் மற்றும் இறைச்சி கழிவுகள் உள்ளிட்டவை கொட்டப்பட்டு வருகிறது. இதனை அவ்வப்போது அகற்றினாலும் குறிப்பிட்ட நாட்களுக்கு அந்த இடத்தில் கழிவுகளை கொட்டிச்செல்கின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு நிலவி வருகிறது.
எனவே இதில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் தரப்பில் தெரிவித்த கருத்துக்கள் வருமாறு:-
தொற்று நோய் பரவும் அபாயம்
ஆறுமுகம்:- கந்தர்வகோட்டையில் உள்ள இறைச்சிகடைகள் பலவற்றில் இருந்து கழிவுகள் அனைத்தும் ஊரின் கடைசிப்பகுதியில் தேசிய நெடுஞ்சாலையோரம் கொட்டப்படுகிறது. மேலும் மருத்துவ கழிவுகளும் கிடக்கிறது. இதில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. அந்த வழியாக செல்லும் போது வாயையும், மூக்கையும் பொத்திக்கொண்டு தான் செல்ல வேண்டி உள்ளது. இதில் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க வேண்டும்.
சுகாதார சீர்கேடு
பெனாசிர்:- இந்த இடத்தில் குப்பைகளோடு இறந்த நாய்களையும் சிலர் போட்டுவிடுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு நிலவுகிறது. அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைகின்றனர். அந்த பகுதியே அசுத்தமாக காணப்படுகிறது. குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த இடத்தை சுத்தப்படுத்தி அதில் மீண்டும் இறைச்சி கழிவுகள் கொட்டாதவாறு கண்காணிக்க வேண்டும்.
அடிக்கடி விபத்து
மகேஷ்:- அந்த இடத்தில் கொட்டப்படும் குப்பைகளை ஆடு, மாடுகள், நாய்கள் கிளறி கொண்டு இருக்கும் போது சில நேரங்களில் அவை சண்டையிட்டு கொண்டு ரோட்டின் நடுவே வந்து விடுகின்றன. இதனால் வாகனங்கள் விபத்தில் சிக்குகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் மின்விளக்கு வசதி இல்லாததால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் நிலைக்குலைந்து விடுகின்றனர். மூட்டை, மூட்டையாக கழிவுகளை கொட்டிவிடுகின்றனர். குப்பைகள் கொட்டுவதற்காக தனியாக இடம் ஒதுக்க வேண்டும். ஏற்கனவே இந்த இடத்தின் அருகே ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. ஆனால் அதில் யாரும் குப்பை மற்றும் கழிவுகளை கொட்டுவதில்லை.
கடும் துர்நாற்றம்
சித்ரவேல்:- இந்த சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. சில நேரங்களில் இறந்த கால்நடைகளையும் சிலர் போட்டு விட்டு சென்று விடுகின்றனர். கழிவுகளை மூட்டையில் கட்டி கொண்டு இரவு நேரங்களில் வந்து வீசிச்சென்றுவிடுகின்றனர். இதனை தடுத்து அப்புறப்படுத்த அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.