சுகாதார பணியாளர் விஷம் குடித்து தற்கொலை முயற்சி
உடன்குடி பேரூராட்சி தூய்மை பணியாளர் வெள்ளிக்கிழமை விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த சக தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
உடன்குடி:
உடன்குடி பேரூராட்சி தூய்மை பணியாளர் நேற்று விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த சக தூய்மைப்பணியாளர்கள் மற்றும் அவரது உறவினர்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூய்மை பணியாளர்
உடன்குடி பேரூராட்சி புதுக்காலனியைச் சேர்ந்தவர் சுடலைமாடன் (வயது 56). இவர் பேரூராட்சியில் தூய்மை பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் பேரூராட்சி நிர்வாகத்தினர் சுடலைமாடனுக்கு கூடுதல் பணிகள் வழங்கியதுடன், அவரை அவதுறாக பேசி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலையில் வழக்கம் போல் அவர் பேரூராட்சி அலுவலகத்துக்கு வேலைக்கு வந்துள்ளார்.
தற்கொலை முயற்சி
தனக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் வேலை பார்த்து கொண்டிருந்த அவரை பேரூராட்சி அலுவலர்கள் சிலர் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த அவர் காலை 11 மணிக்கு வீட்டிற்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் அவரை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ேசர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பேரூராட்சி அலுவலகம் முற்றுகை
இதை அறிந்த சக துய்மைப்பணியாளர்களும், சுடலைமாடன் உறவினர்களும் நேற்று மாலையில் பேரூராட்சி அலுவலர்களை கண்டித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது சுடலைமாடனை அவதூறாக பேசி மனஉளைச்சலை ஏற்படுத்தி தற்கொலைக்கு தூண்டிய அலுவலர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் விசாரணை
இதுகுறித்து தகவல் அறிந்து சாத்தான்குளம் போலீஸ் துணைசூப்பிரண்டு அருள் மற்றும் போலீசார் பேரூராட்சி அலுவலகத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் சமாதானம் அடைந்த அவர்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர். மேலும் சுடலைமாடன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து உடன்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.