தென்காசி அருகே, அரசு காப்பகத்தில் தங்கி இருக்கும்குருத்திகாவிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு
தென்காசி அருகே, அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இளம்பெண் குருத்திகாவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. யாரையும் உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
தென்காசி அருகே, அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள இளம்பெண் குருத்திகாவுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. யாரையும் உள்ளே செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
கோர்ட்டில் ஆஜர்
தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள கொட்டாகுளத்தை சேர்ந்த வினித் மற்றும் குருத்திகா காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் இளம்பெண் குருத்திகா கடத்திச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் வினித் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் குருத்திகாவை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவரை 2 நாட்கள் அரசு காப்பகத்தில் தங்க வைக்க வேண்டும் என்றும், அவருக்கு எந்த அழுத்தமும் கொடுக்காமல் 2 நாட்கள் கழித்து ரகசிய வாக்குமூலம் வாங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
காப்பகத்தில் தங்க வைப்பு
இதைத்தொடர்ந்து குருத்திகாவை நேற்று முன்தினம் இரவு தென்காகி அருகே நன்னகரத்தில் உள்ள அரசு காப்பகத்துக்கு போலீசார் அழைத்து வந்தனர். அங்கு குருத்திகா தங்க வைக்கப்பட்டுள்ளார்.
மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் `சகி-ஒன் ஸ்டாப் சென்டர்' என்ற பெயரில் இந்த காப்பகம் இயங்கி வருகிறது. பெண்கள் தங்களது குறைகளை இந்த காப்பகத்தின் தொலைபேசி எண் 181-ல் தொடர்பு கொண்டு தெரிவித்தால், இங்கு அழைத்து `கவுன்சிலிங்' கொடுக்கிறார்கள்.
பலத்த பாதுகாப்பு
குருத்திகா தங்க வைக்கப்பட்டு உள்ள இந்த அரசு காப்பகத்திற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒரு ஷிப்டிற்கு 7 பெண் போலீசார், 2 ஆண் போலீசார் ஆகியோர் ஒரு சப்-இன்ஸ்பெக்டர் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
உறவினர்கள் மற்றும் நண்பர்கள் யாரையும் போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. நாளை (வெள்ளிக்கிழமை) குருத்திகாவிடம் போலீசார் ரகசிய வாக்குமூலம் பெற உள்ளனர்.