நீலகிரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
நீலகிரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
ஊட்டி
கோவையில் நடந்த குண்டு வெடிப்பு வழக்கில், உக்கடம் பிலால் எஸ்டேட் பகுதியை சேர்ந்த அபுதாஹிர்(வயது 42) கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து கோவை சிறை துணை வார்டன் ஜெயபிரகாஷ் கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்றார். கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவருக்கு, சிறுநீரக கோளாறு ஏற்பட்டது. பின்னர் பரோல் பெற்று தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி அபுதாஹிர் நேற்று முன்தினம் உயிரிழந்தார். அவரது உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்டது. இதையொட்டி அசம்பாவித சம்பவங்கள் ஏற்படுவதை தடுக்க கோவையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.
இதேபோன்று நீலகிரி மாவட்டத்திலும் கக்கனல்லா, மாவனல்லா, பர்லியாறு உள்பட 14 சோதனைச்சாவடிகளில் போலீசார் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர். மேலும் ஊட்டி சேரிங்கிராஸ், பஸ் நிலையம், குன்னூர் சந்திப்பு உள்பட பல்வேறு இடங்களில் கூடுதல் சோதனை சாவடிகள் அமைத்து போலீசார் கண்காணித்தனர். இது தவிர ஓட்டல்கள், விடுதிகள், சுற்றுலா தலங்களில் சாதாரண உடையில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், 150 போலீசார் பாதுகாப்பு பணிக்காக கோவைக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். நீலகிரியில் 650 போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருக்கின்றனர் என்றார்.