பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
குடவாசலில் பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குடவாசலில் பலத்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
குடவாசலில் மழை
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் தொடங்கியதில் இருந்தே பரவலாக மழை பெய்து வருகிறது. திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் மழை நீடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தென் மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, அதே இடத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும், அது அடுத்த 24 மணி நேரத்தில் வட மேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் குடவாசலில் நேற்று மதியம் 12 மணி முதல் தொடர்ந்து 2 மணி நேரம் பலத்த மழை கொட்டி தீர்த்தது.
சாலைகளில் மழை நீர் ஆறு போல் ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைத்தெருவிற்கு வந்திருந்த பொதுமக்கள் மழையில் நனைந்தனர்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு
இடைவிடாமல் மழை பெய்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இதேபோல் மன்னார்குடி, நீடாமங்கலம், கூத்தாநல்லூர் ஆகிய பகுதிகளில் நேற்று காலை லேசான மழை பெய்தது. திருவாரூர் நகர பகுதிகளில் ேநற்று அதிகாலை முதல் மதியம் வரை விட்டு, விட்டு கனமழை பெய்தது. நன்னிலத்தில் நேற்று காலை 6 மணி முதல் பலத்த மழை பெய்தது. இந்த மழை விட்டு விட்டு மதியம் 2 மணி நேரம் நீடித்தது. இதனால் விவசாய பணிகள் பாதிக்கப்பட்டது.