திண்டுக்கல், கொடைக்கானலில் பலத்த மழை; அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டியது
திண்டுக்கல், கொடைக்கானலில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டியது.
திண்டுக்கல், கொடைக்கானலில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் அருவிகளில் தண்ணீர் ஆர்பரித்து கொட்டியது.
திண்டுக்கல்லில் பலத்த மழை
வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் கரையை கடந்த போது திண்டுக்கல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதன் பின்னர் கடந்த 2 நாட்களாக மழை பெய்யவில்லை. அதேநேரம் நள்ளிரவு முதல் அதிகாலை வரை கடுமையான பனிப்பொழிவு காணப்பட்டது. மேலும் பகலில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இந்த நிலையில் நேற்றும் சூரியனை அவ்வப்போது மேகக்கூட்டங்கள் மறைத்தன.
இதனால் பகலில் வெப்பம் குறைவாக இருந்தது. இதற்கிடையே திண்டுக்கல்லில் மாலையில் வானில் மேகக்கூட்டங்கள் திரண்டன. இதையடுத்து இரவு 7 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் அது பலத்த மழையாக மாறியது. இந்த மழை இரவு 8.30 மணி வரை சுமார் 1½ மணி நேரம் பெய்து இரவை இதமாக்கியது. மேலும் திண்டுக்கல் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளிலும் மழை பெய்தது.
பலத்த மழையால் திண்டுக்கல் நாகல்நகர், நேருஜிநகர், மெயின்ரோடு, ரவுண்டுரோடு பகுதிகளில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
அருவிகளில் ஆர்ப்பரித்த தண்ணீர்
இதேபோல் 'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானல் பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று காலை முதலே வானில் கார் மேகக்கூட்டங்கள் திரண்டன. மேலும் எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டமும் காணப்பட்டது.
இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குளை எரியவிட்டபடி சென்றன. இதைத்தொடர்ந்து மதியம் 2 மணி முதல் 4 மணி வரை சாரல் மற்றும் மிதான மழை பெய்தது. இந்த மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி, டோபிக்கானல் அருவி உள்ளிட்ட நீர்நிலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
அறைகளில் முடங்கிய சுற்றுலா பயணிகள்
மழை பெய்தபோது அவ்வப்போது காற்று வீசியதால், பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் மீது மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக மூஞ்சிக்கல் மற்றும் ஆனந்தகிரி பகுதியில் சுமார் ¾ மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி இருளில் மூழ்கியது.
இதையடுத்து மின் ஊழியர்கள் மரக்கிளைகளை வெட்டி அகற்றி மின் தடையை சரி செய்தனர். தொடர் மழை மற்றும் அடர்ந்த மேகமூட்டம் காரணமாக கொடைக்கானலுக்கு வருகை தந்த சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களை காண முடியாமல் அறைகளிலேயே முடங்கினர்.
மேலும் பகல் நேரத்திலேயே கடும் குளிர் நிலவியதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குளிருக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிந்து நடமாடினர். பலர் நெருப்பு மூட்டி குளிர் காய்ந்தனர் அதனை தொடர்ந்து இரவு நேரத்திலும் கடுமையான குளிர் நிலவியது.
நத்தம், பழனி
இதேபோல் நத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் மாலை 3 மணியில் இருந்து இரவு 8 மணி வரை மழை கொட்டி தீர்த்தது. இதனால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளித்தன.
நீண்ட நாட்களுக்கு பின்னர் நல்ல மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதுதவிர பழனி, சத்திரப்பட்டி, வடமதுரை, செந்துரை உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பெய்தது.