சிவகங்கை மாவட்டத்தில் பலத்த மழை
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது.
காரைக்குடி
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது.
பலத்த மழை
வங்ககடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தில் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. இதையொட்டி சிவகங்கை மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதன் பின்னர் நேற்று காலை முதல் பலத்த மழை பெய்தது. சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், சிங்கம்புணரி, இளையான்குடி, காளையார்கோவில், தேவகோட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்தது.
காரைக்குடி பகுதியில் நேற்று காலை 7 மணி முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதன் பின்னர் மதியம் மழை நின்ற நிலையில் மீண்டும் மாலை 5 மணி முதல் பலத்த மழை பெய்தது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடியும், சிலர் குடைகள் மற்றும் மழை கோட் அணிந்தபடியும் சென்றனர். இதேபோல் பல்வேறு அலுவலக வேலைக்கு சென்றவர்களும் மழையில் நனைந்தபடியே சென்றனர்.
பொதுமக்கள் சிரமம்
சிங்கம்புணரி பகுதியில் நேற்று அதிகாலை 4 மணி முதல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதன் பின்னர் பகல் முழுவதும் அவ்வப்போது சாரல் மழை பெய்ய தொடங்கியதால் நேற்று வழக்கம் போல் நடைபெற்ற வாரச்சந்தையில் வியாபாரிகளும், பொருட்களை வாங்க வந்த பொதுமக்களும் சிரமம் அடைந்தனர். இதேபோல் மானாமதுரை, திருப்புவனம், சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்ததால் ஏற்கனவே பயிரிட்டு அறுவடைக்கு தயாராக இருந்த நெல்பயிர்களை விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் தவித்தனர். மேலும் வயல்களில் தண்ணீர் தேங்கியதால் அதை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டனர். மேலும் நேற்று தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் பள்ளிகளுக்கு விடுமுறை விடலாமே என பெற்றோர்கள் தரப்பில் புலம்பினர்.
மழை அளவு
எஸ்.புதூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான செட்டிகுறிச்சி, புழுதிபட்டி, தர்மபட்டி, குன்னத்தூர், கே.புதுப்பட்டி, கரிசல்பட்டி, பிரான்பட்டி, நாகமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதலே சாரல் மழை பெய்ய தொடங்கியது. மேலும் அவ்வப்போது அறிவிக்கப்படாத தொடர் மின்வெட்டு காரணமாக பொதுமக்கள், வணிகர்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகினர்.
நேற்று மாலை 4 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- சிவகங்கை 20, மானாமதுரை 10.5, இளையான்குடி 15.6, திருப்புவனம் 12.8, திருப்பத்தூர் 16.6, காரைக்குடி 4, தேவகோட்டை 51.04, காளையார்கோவில் 24.02, சிங்கம்புணரி 14.20.