இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை
ராமநாதபுரம் அருகே பல கிராமங்களில் இரவு முழுவதும் விடிய, விடிய பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
ராமநாதபுரம் அருகே பல கிராமங்களில் இரவு முழுவதும் விடிய, விடிய பெய்த கனமழையால் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கி நின்றது.
கனமழை
தமிழகத்தில் தற்போது கோடைகால சீசன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. இதனிடையே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டத்திலும் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் மிக அதிகமாக இருந்த நிலையில் தற்போது கடந்த 3 நாட்களுக்கு மேலாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. ராமநாதபுரம் அருகே திரு உத்தரகோசமங்கை, பனைக்குளம், நல்லாங்குடி, சீத்தை, எட்டிவயல், சத்திரக்குடி, களரி, ஆணைகுடி உள்ளிட்ட பல கிராமங்களிலும் 2-வது நாளாக நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று அதிகாலை வரையிலும் விடிய, விடிய பலத்த மழை பெய்தது.
இந்த கனமழையால் நல்லாங்குடி, பனைக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளில் முன்பும் மழை நீர் தேங்கி நிற்கின்றது. அது மட்டுமல்லாமல் இந்த கிராமங்களை சுற்றி உள்ள அனைத்து வயல்வெளி பகுதி மற்றும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளிலும் மழை நீர் அதிக அளவில் தேங்கி நின்றது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதுகுறித்து இந்த கிராம விவசாயிகள் கூறும்போது, நெல் விவசாயத்திற்கு தேவையானபோது பெய்ய வேண்டிய சீசனில் மழை பெய்யவில்லை. ஆனால் இந்த கோடை காலத்தில் தற்போது பெய்து வரும் மழையால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியாக உள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளுக்கு தண்ணீர் குடிப்பதற்கும், தாகம் தீர்ப்பதற்கும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் வாய்ப்பாக அமையும். இந்த மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்றனர்.