சூறைக்காற்றுடன் கனமழை
நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
சூறைக்கற்றுடன் கனமழை
நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. அதன் காரணமாக 2 சக்கர வாகன ஓட்டிகள், நடந்து செல்பவர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பின்னர் மாலை 4 மணியளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து 5 மணியளவில் நாமக்கல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. அதனால் ஆங்காங்கே சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியதை காண முடிந்தது. மழை காரணமாக குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சாலையில் மரம் விழுந்தது
சேந்தமங்கலம் பகுதியில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் திடீரென்று மழை பெய்தது. அந்த மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமாக ஓடியது. தாழ்வான பகுதிகளில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் சேந்தமங்கலம் - நாமக்கல் சாலையோரம் இருந்த மரம் ஒன்று வேருடன் முறிந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லாமல் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் தகவல் அறிந்த நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் அங்கு விரைந்து சென்று சாலையில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தினர். அதன்பிறகு அவ்வழியே வாகனங்கள் சென்றன. பகல் நேரத்தில் வெப்பம் வாட்டி எடுத்த நிலையில் மாலையில் மழை பெய்தது பொதுமக்களை மகிழ்ச்சி அடைய செய்தது.
இதேபோல் எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வைத்து வந்தது. இந்தநிலையில் நேற்று மாலை சுமார் 5 மணி அளவில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. சுமார் 1 மணி நேரம் மழை பெய்தது. இதில் வீதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீரென மழை பெய்ததால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.