இடி, மின்னலுடன் பலத்த மழை சாலையில் குப்பைகள் தேங்கியது


இடி, மின்னலுடன் பலத்த மழை சாலையில் குப்பைகள் தேங்கியது
x

வேலூரில் இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பாதாள சாக்கடைக்கு தோண்டிய சாலையில் சாக்கடைநீருடன் குப்பைகள் அடித்து வரப்பட்டு அலங்கோலமாக காணப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

வேலூர்

வேலூரில் இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பாதாள சாக்கடைக்கு தோண்டிய சாலையில் சாக்கடைநீருடன் குப்பைகள் அடித்து வரப்பட்டு அலங்கோலமாக காணப்பட்டதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.

பலத்த மழை

வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே திடீர் மழை பெய்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கமும் குறைந்திருந்தது. அக்னி நட்சத்திரத்தால் கடுமையான வெயில் கொளுத்தும் என அச்சத்துடன் பொதுமக்கள் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கும் குறைவாகவே வெயில் அளவு பதிவானது.

இந்தநிலையில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. அதன்பின் 2.30 மணி அளவில் திடீரென பலத்த மழை பெய்தது. இடி, மின்னலுடன் பெய்த மழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்த ஓடியது.

சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியே சென்றனர். பலர் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்திவிட்டு அருகில் இருந்த கடைகளில் தஞ்சமடைந்தனர்.

சாலையில் குப்பைகள்

வேலூர் -ஆற்காடு சாலையில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கான சாலைகள் தோண்டப்பட்டிருந்ததால் வாகன ஓட்டிகள் ஏற்கனவே மிகவும் சிரமத்துடன் சென்று வந்தனர்.

இந்த நிலையில் அந்த சாலையில் காகிதப்பட்டறை பகுதியில் பெருக்கெடுத்த வெள்ளத்தால் சாலையோரம் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டது. வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலை இருந்தது. அந்த பகுதியில் மழைநீருடன் கழிவுநீர் கலந்து கருப்பு நிறத்தில் வெள்ளம் பாய்ந்தோடியது.

மேலும் கால்வாயில் கொட்டப்பட்டிருந்த குப்பைகள் சாலைக்கு வந்தது. மழை நின்ற பின்னரும் சாலையில் குப்பைகள் ஆங்காங்கே சிதறி அலங்கோலமாக கிடந்தன. இந்த மழை சுமார் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்தது. அதன் பின்னரும் சாரல் மழை பெய்தது.

குடியாத்தம்

குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுப்புற கிராமப் பகுதிகளில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலையில் குடியாத்தம் நகரம், பரதராமி, கல்லப்பாடி, சைனகுண்டா, சேம்பள்ளி, தட்டப்பாறை, எர்தாங்கல், மேல்ஆலத்தூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகளில் தொடர்ந்து2 மணி நேரத்திற்கும் மேலாக மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் நிலவியது. கத்திரி வெயில் ஆரம்பித்தவுடன் பெய்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story