7 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிா்கள் சேதம்
மயிலாடுதுறையில், 2 நாட்களாக பெய்த மழையால் 7 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
மயிலாடுதுறையில், 2 நாட்களாக பெய்த மழையால் 7 ஆயிரம் ஏக்கர் குறுவை நெற்பயிா்கள் சேதமடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
பலத்த மழை
மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக மாலை தொடங்கி நள்ளிரவு வரை கனமழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவு காற்றுடன் பெய்த பலத்த மழை காரணமாக மயிலாடுதுறை, மணல்மேடு செம்பனார்கோவில், சீர்காழி, குத்தாலம், கொள்ளிடம் உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது.அதிகபட்சமாக மணல்மேடு பகுதியில் 7 செ.மீட்டர் மழையும், மயிலாடுதுறையில் 4.5 செ.மீட்டர், தரங்கம்பாடியில் 4 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த மழை காரணமாக வயல்களில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. இந்த ஆண்டு காவிரியில் முன்கூட்டியே தண்ணீர் திறந்து விட்ட காரணத்தால் வழக்கமான பரப்பளவைவிட கூடுதல் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது.
7 ஆயிரம் ஏக்கர்
92ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட குறுவை நெற் பயிர்கள் அறுவடைக்கு தயாராக உள்ளது. ஒரு சில இடங்களில் முற்றிய நெற்பயிர்கள் அறுவடை செய்யப்பட்டு வந்த நிலையில் கடந்த 2 தினங்களாக பெய்த கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் 7 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி உள்ளன. இதனால் நெல் தரம் குறைவதுடன் அறுவடை எந்திரத்தின் மூலம் அறுவடை செய்யும் போது நெல்மணிகள் தரையில் சிதறி விளைச்சல் குறையும் என்றும், எந்திரத்தின் வாடகை அதிகரிக்கும் என்றும் விவசாயிகள் தெரிவித்தனர்.
கொள்ளிடம்
கொள்ளிடம் பகுதியில் கடந்த 2 நாட்களாக மாலை நேரங்களில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. கொள்ளிடம் அருகே உள்ள எருக்கூர், அரசூர், குன்னம், மாதிர வேளூர், வடரங்கம், பனங்காட்டங்குடி, அகரஎலத்தூர், பச்சை பெருமாள் நல்லூர், மாதானம், உமையாள்பதி, ஆகிய பகுதிகளில் சுமார் 500 ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி செய்துள்ளனர். தற்பொழுது குறுவை நெற்பயிர் அறுவடைக்கு தயாரான நிலையில் கடந்த 2 நாட்களாக மாலை முதல் இரவு வரை பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து நெற்கதிர்கள் தண்ணீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
ரூ.20 ஆயிரம்
இந்த ஆண்டு குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீட்டு திட்டம் தமிழக அரசு அறிவிக்காத நிலையில் நிவாரணம் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏக்கருக்கு ரூ.20 ஆயிரம் செலவு செய்துள்ள நிலையில் செலவு செய்த தொகை கூட கையில் கிடைக்காது என்று விவசாயிகள் வேதனையுடன் கூறினர்.