கனமழை எதிரொலி:மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு:சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி


கனமழை எதிரொலி:மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு:சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
x
தினத்தந்தி 25 Aug 2023 12:15 AM IST (Updated: 25 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்ததால் மேகமலை அருவியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தேனி

மேகமலை அருவி

வருசநாடு அருகே கோம்பைத்தொழு கிராமத்தில் மேகமலை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேகமலை வனப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். நீர்வரத்து உள்ள நாட்களில் மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிக்கு வந்து குளித்து செல்வார்கள். கடந்த 3 மாதங்களாக மேகமலை வனப்பகுதியில் போதிய அளவில் மழை பெய்யவில்லை.

இதனால் கடந்த வாரம் அருவியில் நீர்வரத்து முற்றிலுமாக நின்று போனது. அருவியின் மேல் பகுதியில் மட்டும் லேசான நீர்வரத்து இருந்தது. அந்த இடத்தில் 52 கிராமங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் எடுத்து செல்ல தொட்டி கட்டப்பட்டுள்ளது. நீர்வரத்து இல்லாததால் அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகள் குடிநீர் தொட்டியில் குளித்து குடிநீரை மாசுபடுத்தும் நிலை காணப்பட்டது.

சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

இதனால் மேகமலை வனத்துறையினர் அருவிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதித்தனர். மேலும் அருவி அருகே உள்ள சோதனை சாவடியில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மேகமலை வனப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

இதன் எதிரொலியாக, நேற்று அருவியில் நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதையடுத்து அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு குளிப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி வனத்துறையினர் அனுமதி வழங்கினர். இதனால் வருகிற விடுமுறை நாட்களில் அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே வனத்துறையினரும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Related Tags :
Next Story