மதுரையில் 2 மணி நேரம் கனமழை -பலத்த காற்றில் மரங்கள் விழுந்து வாகனங்கள் சேதம்


மதுரையில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மரங்கள் விழுந்து வாகனங்கள் சேதம் அடைந்தன.

மதுரை


மதுரையில் நேற்று பலத்த காற்றுடன் பெய்த கனமழை காரணமாக மரங்கள் விழுந்து வாகனங்கள் சேதம் அடைந்தன.

மதுரையில் மழை

மதுரையில் கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. தினமும் 100 டிகிரிக்கும் மேல் வெயில் பதிவாகி வந்தது. இந்தநிலையில், நேற்று முன்தினம் மதுரையில் திடீரென மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது.

இதற்கிடையே 2-வது நாளாக நேற்றும் மதுரை நகர் பகுதிகளில் மழை பெய்தது. அதாவது, மாலை 5 மணிக்கு தொடங்கிய இந்த மழை 2 மணிநேரத்திற்கு மேல் கனமழையாக ெகாட்டியது. அதன் பின்னர் விட்டு விட்டு தூறிக் கொண்டிருந்தது. மழையின்போது பலத்த காற்றும் வீசியது.

போக்குவரத்து தடை

மணிநகரம் பகுதியில் உள்ள கர்டர் பாலத்தில் மழைநீர் குளம்போல் தேங்கியது. போலீசார் அந்த பகுதியில் தடுப்புகள் அமைத்து, அந்த வழியாக வந்த வாகனங்களை வேறு வழியில் திருப்பி விட்டனர்.

செல்லூர்-தத்தனேரி பகுதியில் உள்ள கர்டர் பாலத்திலும் மழைநீர் தேங்கியது. இருப்பினும் வாகனங்கள் தண்ணீரில் தத்தளித்தப்படி சென்றன. பழங்காநத்தம் பகுதியில் உள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் அதிக அளவில் தேங்கியதால் அந்த வழியாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

வாகனங்கள் சேதம்

மழையின்போது வீசிய பலத்த காற்றால் நகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. குறிப்பாக, ஆரப்பாளையம் ஏ.ஏ. ரோடு, தத்தனேரி இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரி, ஆரப்பாளையம் தண்ணீர் தொட்டி பகுதி உள்ளிட்ட இடங்களில் மரங்கள் விழுந்தன. மரங்கள் விழுந்ததில், 2 ஆட்டோக்கள் உள்ளிட்ட வாகனங்களும் சேதம் அடைந்தன. அதேபோல் ஏ.ஏ. ரோடு பகுதியில் மரக்கிளைகள் முறிந்து விழுந்ததால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலப்பொன்னகரம் 11-வது தெரு பகுதியில் மின்கம்பம் விழுந்தது. ஆனால், அந்த நேரத்தில் மின்தடை ஏற்பட்டு இருந்ததால் யாருக்கும் பாதிப்பு இல்லை. மழை பெய்தபோது நகரில் பல இடங்களில் மின்தடை இருந்தது. திடீர்நகர், தல்லாகுளம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சாலையில் விழுந்த மரங்கள் மற்றும் மின்கம்பத்தை அகற்றினர்.


Related Tags :
Next Story