திருவாரூர் மாவட்டத்தில் 2 நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழை
திருவாரூர் மாவட்டத்தில் 2 நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் பயிர்கள் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் 2 நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழையால் பயிர்கள் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.
நெற்பயிர்கள் மூழ்கின
திருவாரூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே திறக்கப்பட்டது. இதனால் 3 போக சாகுபடி பணிகளை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். எந்த ஆண்டும் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி நடைபெற்றது. தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.மேலும் 1 லட்சத்து 57 ஆயிரத்து 200 ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 2 நாட்களாக திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரவு நேரங்களில் இடி- மின்னலுடன் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்றுமுன்தினம் இரவும் கன மழை பெய்ததால் சம்பா இளம் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன.
விவசாயிகள் கவலை
குறிப்பாக திருவாரூர் மாவட்டம் கானூர், கள்ளிக்குடி, தென்ஓடாசேரி, பாலையாபுரம் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா இளம் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கியுள்ளன. மேலும் மழை தொடரும் நிலையில் பாசன வாய்க்கால் தூர்வாரப்படாததால் வயல்களில் தேங்கிய மழைநீர் வடிய வாய்ப்பு இல்லாத நிலை உள்ளது.இதனால் விவசாயிகள் செய்வது அறியாமல் திகைத்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழை தொடர்ந்து பெய்தால் சம்பா நெற் பயிர்கள் மழை நீரில் முற்றிலுமாக அழுகிவிடும். இதனால் மிகுந்த கவலையில் உள்ளோம். எனவே பாசன வாய்க்கால், வடிகால்களை முழுமையாக தூர்வார வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
கூத்தாநல்லூர்
திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் பல விவசாயிகள் குறுவை சாகுபடி செய்து வந்தனர். அவர்கள் எதிர்பார்த்தபடியே கடந்த சில மாதங்கள் கடுமையான வெயில் நிலவியதாலும், ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வரத்து இருந்ததாலும் குறுவை நெற்பயிர்கள் நல்ல விளைச்சல் ஏற்பட்டது. பல இடங்களில் நெற்பயிர்கள் அறுவடைக்கு தயாராகி வரும் நேரத்தில் திடீரென கடந்த 25-ந் தேதி இரவு பலத்த காற்று மற்றும் இடி- மின்னலுடன் கனமழை பெய்தது. 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால், கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் பல இடங்களில் குறுவை நெற்பயிர்கள் வயலில் தண்ணீரில் மூழ்கியது. மேலும், அறுவடை செய்யப்பட்ட நெல்கள் மழையில் நனைந்து ஈரமானது. ஈரமான நெல்லை சாலையில் கொட்டி உலர வைக்கும் பணிகளிலும் அப்பகுதி விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கூத்தாநல்லூர் மற்றும் வடபாதிமங்கலம் பகுதியில் 2-வது நாளாக இரவில் பலத்த மழை பெய்தது. இதனால், தற்போது, சம்பா தாளடி நெற்பயிர்களும் தண்ணீரில் மூழ்கியது. இதனால் வயல்களில் பயிர்கள் மூழ்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மேலும், மழை தொடர்ந்து பெய்ததால் பயிர்கள் அழுகி மிகப்பெரிய நஷ்டம் ஏற்படும் என விவசாயிகள் கவலையுடன் கூறினர்.
மழை அளவு
திருவாரூர் மாவட்டத்தில் நேற்று காலை 6 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- திருவாரூர்-70, நன்னிலம் -112, குடவாசல்-31, வலங்கைமான்-20, மன்னார்குடி-20, நீடாமங்கலம்-20, பாண்டவயாறு தலைப்பு-24, முத்துப்பேட்டை-2.6 என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகப்பட்சமாக நன்னிலத்தில் 112 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.