குளித்தலையில் பலத்த மழை
குளித்தலையில் பலத்த மழை பெய்தது.
பலத்த மழை
குளித்தலை நகரம் மற்றும் கிராம பகுதிகளில் நேற்று முன்தினம் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இரவு சுமார் 10 மணியளவில் பெய்ய தொடங்கிய மழை இரவு முழுவதும் பெய்து கொண்டே இருந்தது. நேற்று காலை முதலே மிதமான மழை பெய்து கொண்டே இருந்தது. இதனைத் தொடர்ந்து காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை பலத்த மழை பெய்தது. பின்னர் அவ்வப்போது லேசான மழை விட்டு விட்டு பெய்தது. இதனால் பொதுமக்கள் மழையில் நனைந்தபடியும் குடையை பிடித்தபடியும் சாலைகளில் நடந்து சென்றனர். இந்த மழையின் காரணமாக சாலையோர வியாபாரிகள், பொதுமக்கள் சற்று பாதிக்கப்பட்டனர்.
கரூர், வேலாயுதம்பாளையம்
கரூரில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் காலை 11.30 மணியளவில் சாரல் மழை பெய்தது. இந்த மழையானது கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது.
வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், மூலிமங்கலம், காகிதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் பகல்முழுவதும் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் 11 மணியளவில் கனமழை பெய்தது. அதன் பின்னர் மாலை 5 மணியளவில் சாரல் மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.
வியாபாரிகள் பாதிப்பு
நொய்யல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நன்செய் புகழூர், நத்தமேடு, பாலத்துறை, கந்தம்பாளையம், கொங்கு நகர், பழமாபுரம், புன்னம் சத்திரம், மரவாபாளையம், அத்திப்பாளையம், குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று காலை 11.30 மணியளவில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக சாலையோர வியாபாரிகள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதியடைந்தனர். அதேபோல் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழையில் நனைந்து கொண்டே சென்றனர்.