புகழூர், தோகைமலை பகுதிகளில் கனமழை


புகழூர், தோகைமலை பகுதிகளில் கனமழை
x

புகழூர், தோகைமலை பகுதிகளில் கனமழை பெய்ததால் 2 வீடுகள் சேதமடைந்தன.

கரூர்

வீடுகள் சேதம்

கரூர் மாவட்டம் நொய்யல், தவிட்டுப்பாளையம், நஞ்சை புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் பாதிப்படைந்தனர். இதன் ஒருபகுதியாக புகழூர் பழனிமுத்து நகரில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் காரணமாக பழனி முத்துநகர் பகுதி சேர்ந்த நாகப்பன் (வயது 45) என்பவரது வீடு திடீரென இடிந்து சாலையில் கீழே விழுந்தது.

அதேபோல் அவரது வீட்டின் எதிரில் இருந்த ஒருவரிடம் வீட்டின் சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக 2 வீடுகளிலும் இருந்தவர்கள் வெளியூர் சென்று இருந்தனர். நேற்று யாரும் வீட்டில் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. அதேபோல் வீட்டு சுவற்றில் கற்கள் தெருவின் சாலையில் விழுந்த போது அந்த வழியாக யாரும் நடந்து செல்லாததால் விபத்து ஏற்படவில்லை. இதுகுறித்து தகவல் அறிந்த போளூர் நகராட்சி தலைவர் சேகர் என்கிற குணசேகரன், துணைத் தலைவர் பிரதாபன், புகழூர் மண்டல துணை தாசில்தார் அன்பழகன், வருவாய் துறையினர் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.

தோகைமலை

தோகைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். இந்தநிலையில் தோகைமலை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பயிர்கள் நன்கு வளர்ந்து துளிர் விட ஆரம்பித்து உள்ளது. மேலும், கிணறுகளில் நீரோட்டம் அதிகரித்து உள்ளது. இந்த மழையால் விவசாயிகள், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Next Story