சென்னையில் விடிய விடிய கனமழை..!
சென்னையில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது.
சென்னை,
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது. கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், அசோக் நகர், கோடம்பாக்கம், அம்பத்தூர், போரூர், ஆவடி, பூவிருந்தவல்லி, திருமுல்லைவாயல், பட்டாபிராம், கொரட்டூர், செம்பரம்பாக்கம் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மேலும் சென்னை சென்டிரல், எழும்பூர், சேப்பாக்கம், கடற்கரை சாலை, கோயம்பேடு, மயிலாப்பூர், தரமணி, பாரிமுனை, சேப்பாக்கம், வில்லிவாக்கம், புரசைவாக்கம், சேத்துப்பட்டு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. விடிய விடிய பெய்த கனமழையால் சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் ஒருசில இடங்களில் காலை 6 மணியளவில் மழை ஓரளவு நின்றது.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட திருப்போரூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம், கோவளம், முட்டுக்காடு பகுதிகளில் பெய்த கனமழையால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.