தஞ்சையில் மீண்டும் மழை
தஞ்சையில் நேற்று மீண்டும் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது
தஞ்சாவூர்;
தஞ்சையில் நேற்று மீண்டும் மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்தது
கோடை வெயில்
தமிழகத்தில் கோடை காலம் முதல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. குறிப்பாக கத்தரி வெயில் எனப்படும் அக்னிநட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. தற்போது 100 டிகிரிக்கும் அதிகமாக வெயில் கொளுத்தி வருகிறது. பகலில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது என்றால் இரவிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. அதன்படி கடந்த 2நாட்களுக்கு முன்பு இரவு 8 மணிக்கு தொடங்கிய மழை அதிகாலை 2 மணி வரை பெய்துகொண்டே இருந்தது. அதன் பின்னர் மழை இன்றி காணப்பட்டது. நேற்று காலை முதல் வெயலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாலை நேரத்தில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. இந்த நிலையில் 6 மணி அளவில் லேசான தூறலுடன் மழை பெய்யத்தொடங்கியது.
பலத்த மழை
பின்னர் பலத்த மழையாக பெய்தது. அரைமணி நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளிலும் தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இந்த திடீர் மழையினால் வெப்பத்தின் தாக்கம் அணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இதே போல் தஞ்சை மாவட்டத்தின் பல்வேறு பகுதகிளிலும் பரவலாக மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் தற்போது விவசாயிகள் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் மழை பெய்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பட்டுக்கோட்டை
பட்டுக்கோட்டையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் திடீரென்று சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. தொடர்ந்து இரவு 8.30மணி வரை இடி- மின்னலுடன் மழை பெய்தது. சூறைக்காற்றால் பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இரவு 7.30 மணியிலிருந்து 8.45 மணி வரை மின்தடை ஏற்பட்டிருந்தது.