அணை பகுதிகளில் பலத்த மழை


அணை பகுதிகளில் பலத்த மழை
x
தினத்தந்தி 23 Sept 2023 12:15 AM IST (Updated: 23 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

குமரி மாவட்டத்தில் அணை பகுதியில் பலத்த மழை பெய்தது. சுருளோடு பகுதியில் 106.2 மி.மீ. பதிவானது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

குமரி மாவட்டத்தில் அணை பகுதியில் பலத்த மழை பெய்தது. சுருளோடு பகுதியில் 106.2 மி.மீ. பதிவானது.

குளுமையான சீசன்

குமரி மாவட்டத்தில் ஜூன், ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போனது என்றே கூறலாம். ஆனால் இந்த மாதத்தின் தொடக்கத்தில் இருந்தே பரவலாக சாரல் மழையும், மிதமான மழையும் பெய்து வருவதால் விவசாயிகளும், மக்களும் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்த மழையால் மாவட்டம் முழுவதும் குளுமையான சீசன் நிலவுகிறது. நேற்று முன்தினமும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக பாசன குளங்களில் தண்ணீர் பெருக தொடங்கியுள்ளது. 400-க்கு மேற்பட்ட குளங்கள் நிரம்பும் தருவாயில் உள்ளன. அணைகளுக்கு வரக்கூடிய நீர் வரத்தும் அதிகரித்துள்ளது. நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மி.மீ.) வருமாறு:-

10 செ.மீ. மழை

பேச்சிப்பாறை அணை-46.8, பெருஞ்சாணி அணை- 98.8, சிற்றார்-1 அணை-30.2, சிற்றார்-2 அணை- 36.4, புத்தன்அணை- 92.6, மாம்பழத்துறையாறு -3.7, முக்கடல் அணை- 53, பூதப்பாண்டி- 20.4, களியல்- 9.4, கன்னிமார்- 28.8, குழித்துறை-12, நாகர்கோவில்-1.2, சுருளோடு- 106.2, தக்கலை-6.3, குளச்சல்-18.8, பாலமோர்-26.2, திற்பரப்பு-4.3, அடையாமடை-9, முள்ளாங்கினாவிளை- 6.2, ஆணைக்கிடங்கு-2. இதில் அதிகபட்சமாக சுருளோடு பகுதியில் 106.2 மி.மீ. அதாவது 10 செ.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது.

இந்த மழையால் பெருஞ்சாணி அணை நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்துள்ளது. அதாவது நேற்று முன்தினம் 38.05 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று 1.05 அடி உயர்ந்து 39.10 அடியாக உயர்ந்தது. பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் நேற்று காலை 19.40 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 984 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 583 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சாணி அணைக்கு வினாடிக்கு 561 கன அடி தண்ணீர் வந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

குமரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக கும்பப்பூ சாகுபடியில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திற்பரப்பு அருவி

மலைப்பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் கோதையாற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஆற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

மேலும் அங்கு குளுமையான சீசன் நிலவி வருவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர். அருவியில் அதிகமாக தண்ணீர் விழும் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்கச் சென்று ஆபத்தில் சிக்காமல் இருப்பதற்காக அந்த பகுதியில் கயிறு கட்டி தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.


Next Story