கல்வராயன்மலை பகுதியில் பலத்த மழை: கல்படை ஆற்று தரைப்பாலத்தை மூழ்கடித்த வெள்ளம் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு
கல்வராயன்மலை பகுதியில் பெய்த பலத்த மழையின் காரணமாக கல்படை ஆற்று தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. இதனால் 5 கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
கச்சிராயப்பாளையம்,
வட தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வும் மையம் தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் கச்சிராயப்பாளையம், கல்வராயன்மலை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதுடன், சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் கல்வராயன்மலையில் உள்ள கல்படை ஆற்றின் தரைப்பாலத்தை வெள்ளம் மூழ்கடித்தபடி செல்கிறது.
போக்குவரத்து துண்டிப்பு
இதனால் பரங்கிநத்தம், பொட்டியம், கல்படை உள்ளிட்ட 5-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் சுற்றி பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். மேலும் சிலர் ஆபத்தை உணராமல், தரைப்பாலத்தின் வழியாக இருசக்கர வாகனங்களிலும், நடந்தும் சென்று வருகின்றனர். ஆண்டுதோறும் மழை பெய்யும் போதெல்லாம் கல்படை ஆற்றின் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் செல்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் பல கிலோ மீட்டர் தூரம் சுற்றிவரவேண்டிய நிலை உள்ளது. எனவே விரைவில் கல்படை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்