கரூர் மாவட்டத்தில் பலத்த மழை
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றது.
பலத்த மழை
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் ஒருபகுதியாக நேற்று காலை கரூர் ஜவகர் பஜார், கோவைரோடு, வெங்கமேடு, பசுபதிபாளையம், காந்திகிராமம், வடிவேல் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். பின்னர் மதியம் முதல் மாலை வரை அவ்வபோது மழை விட்டு, விட்டு பெய்து கொண்டே இருந்தது.
நொய்யல்
நொய்யல் அருகே உள்ள தவிட்டுப்பாளையம், நன்செய் புகழூர், பாலத்துறை, புன்னம், புன்னம் சத்திரம், திருக்காடுதுறை, சேமங்கி, மரவாபாளையம், உப்புபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். அதேபோல் இருசக்கர வாகனங்களில் சாலையில் செல்பவர்களும், நடந்து சென்றகூலி தொழிலாளர்களும் நனைந்து கொண்டே சென்றனர். மழையால் பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டதால் விவசாயிகள் கவலை அடைந்தனர். கார்கள், வேன்கள், லாரிகள் போன்றவற்றில் சென்றவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றனர்.
தோகைமலை-வேலாயுதம்பாளையம்
தோகைமலை ஒன்றியத்திற்குட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் நேற்று தோகைமலை பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், மூலிமங்கலம், காகிதபுரம், புகழூர், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை 4 மணி முதல் மாலை 5 மணி வரை சாரல் மழை பெய்தது. இதனால் குளிர்ந்த காற்று வீசியது.
மழையளவு
கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:- கரூர்-3.2, குளித்தலை- 2, கிருஷ்ணராயபுரம்-6.4, மாயனூர்-5, கடவூர்-4, பாலவிடுதி-9.2.