கரூர் மாவட்டத்தில் பலத்த மழை


கரூர் மாவட்டத்தில் பலத்த மழை
x

கரூர் மாவட்டத்தில் நேற்று பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கரூர்

பலத்த மழை

கரூர் நகரப்பகுதியில் நேற்று காலையில் இருந்து வானம் மேகமூட்டத்துடனே காணப்பட்டது. இந்தநிலையில் கரூர் கோவை ரோடு, ஜவகர் பஜார், வெங்கமேடு, காந்தி கிராமம், தாந்தோணிமலை, பசுபதிபாளையம், ஆண்டாங்கோவில், கரூர் செல்லாண்டிப்பாளையம் செல்லும் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் மாலை 5.30 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. பின்னர் விட்டு, விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது.

இதனால் சாலை ஓரங்களிலும் தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் மாலை நேரத்தில் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பியவர்கள் கடும் அவதி அடைந்தனர். மேலும், பலர் குடைபிடித்தப்படி தங்கள் வீடுகளுக்கு புறப்பட்டு சென்றனர். இந்தநிலையில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

வேலாயுதம்பாளையம்

வேலாயுதம்பாளையம், மூலிமங்கலம், காகிதபுரம், புகழூர், நாணப்பரப்பு, தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று மாலை 5 மணி முதல் மாலை 5.30 மணி வரை பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. பல இடங்களில் மழை நீர் தேங்கி நின்றதை காணமுடிகிறது.

தோகைமலை

தோகைமலை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் பல்வேறு வயல் பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றன. இதனால் சம்பா நெல் சாகுபடி செய்த விவசாயிகள் அறுவடை செய்ய முடியாமல் மிகவும் கவலை அடைந்துள்ளனர். இதனால் தமிழக அரசு நஷ்டஈடு வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

நொய்யல்

நொய்யல் சுற்றுவட்டார பகுதிகளான தவிட்டுப்பாளையம், பாலத்துறை, நன்செய் புகழூர், புன்னம், புன்னம்சத்திரம், மரவாபாளையம், சேமங்கி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகளும் ,பொதுமக்களும் நனைந்து கொண்டே சென்றனர்.


Related Tags :
Next Story