கரூர் மாவட்டத்தில் கனமழை
கரூர் மாவட்டத்தில் கனமழை பெய்துள்ளதால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வெயிலின் தாக்கம்
கரூரில் கடந்த மாதத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. வெயில் 107 டிகிரி வரை கொளுத்தியது. இந்நிலையில் கடந்த வாரத்தில் தொடர்ந்து 3 நாட்கள் மழை பெய்தது. இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. பின்னர் மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரித்தது. இதனால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
இந்நிலையில் தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் மாலை சுமார் 30 நிமிடங்களில் வரை மழை பெய்தது.
கனமழை
இந்நிலையில் நேற்று காலை முதலே கரூரில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. பின்னர் மதியத்திற்கு மேல் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காட்சி அளித்தது.
இந்நிலையில் இரவு சுமார் 7 மணியளவில் இருந்து இரவு 9 மணி பலத்த இடியுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுப்போல ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இந்த மழையால் கரூரில் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
நொய்யல்
கரூர் மாவட்டம், கந்தம்பாளையம், தவுட்டுப்பாளையம், கட்டிபாளையம், மூலியமங்கலம், கரைப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மதியம் கனமழை பெய்தது. இதனால் சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. இந்த மழையால் வாகனங்களில் சென்றவர்கள், நடந்து சென்றவர்களுக்கு நனைந்து சென்றனர். சாலையோர கடைக்காரர்கள் வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.
வேலாயுதம்பாளையம்
வேலாயுதம்பாளையம், கூலக்கவுடனூர், மூலிமங்கலம், காகிதபுரம், புதுகுறுக்கு பாளையம், செக்குமேடு, மூர்த்திபாளையம், புகழூர், நாணப்பரப்பு, செம்பாடம்பாளையம், தோட்டக்குறிச்சி, அய்யம்பாளையம், தளவாப்பாளையம், கடம்பங்குறிச்சி, மண்மங்கலம் ஆகிய பகுதிகளில் ேநற்றுமாலை 6 மணியில் இருந்து 7 மணி வரை கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் பள்ளமான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றது.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோவிலூர், ஆறு ரோடு, ஈசநத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் ஒருமணி நேரம் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. இந்த மழையால் கால்நடைகளுக்கு தேவையான தீவன புற்கள்துளிர் விட ஆரம்பித்துள்ளது.
இதேபோல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று கனமழை பெய்துள்ளது.